Thirukural

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்.

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.)
மணக்குடவர் உரை:
புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.
தேவநேயப் பாவாணர் உரை:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் - விளைவாலும் பொருளாலும் குரலாலும் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல் ; இம்மையும் மறுமையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையிலும் இன்பம் விளைவிக்கும் . இம்மை இன்பமாவது ஐம்புல நுகர்ச்சி பெற்று நோயற்ற நீடு வாழ்வு . மறுமையின்பமாவது விண்ணுலக வாழ்வு அல்லது மண்ணுலக நற்பதவி . இன்சொல் என்பது இன்செயலையுந் தழுவும் .
கலைஞர் உரை:
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனால் இம்மைக்கு மட்டுமல்ல; மறுமைக்கும் உதவும்) மனத்தில் கெட்ட எண்ணம் இல்லாமல் இனிய சொற்களையே பேசினால் அது இம்மை மறுமை இரண்டுக்கும் நன்மை உண்டாக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிறர்க்குத் துன்பம் செய்யாத இனிய சொற்கள் மறுமையிலும் இம்மையிலும் இன்பத்தினைக் கொடுப்பதாகும்.
தமிழ்க்குழவி உரை:
சிறுமை படாத சீரிய சொற்கள், ஒருவர்க்கு இம்மையிலும் மறுமையிலும் எல்லா நலன்களையும் நல்கும்.
Translation
Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart.
Explanation
Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.
Transliteration
Sirumaiyul Neengiya Insol Marumaiyum Immaiyum Inpam Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 98