|
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம்.
இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பந் தருதலை நுகர்ந்தறிகின்றவன் ; வன்சொல் வழங்குவது எவனோ - தான் மட்டும் பிறரிடத்தில் வன் சொல்லை ஆள்வது என்ன பயன்கருதியோ !
' கொல் ' அசைநிலை . ' ஒ ' இரக்கப் பொருளது . " தன்னுயிர் போல் மன்னுயிரை நினைக்க வேண்டும் . " என்பது , இங்கு வற்புறுத்தப் பட்டது .
|
|
கலைஞர் உரை:
|
|
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு
மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மறுமையைப்பற்றி எண்ணாவிட்டாலும் இம்மை யிலேயே கண்ணாரப் பார்க்கிறோம்.) இனிய வார்த்தைகளால் இனிய பலன்கள் உண்டாவதைத் தினந்தினம் கண்ணுக்கு முன்னால் பார்த்துக் கொண்டிருக்கின்ற மனிதன், எதற்காகத் துன்பத்தை உண்டாக்குகிற கடுஞ் சொற்களைப் பேசுகிறானோ தெரியவில்லை!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பத்தினைத் தரும் என்பதைக் கண்ட ஒருவன், பிறரிடம் கடுஞ்சொற்களைச் சொல்லுவது என்ன பயன் கருதி?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இனிய சொற்கள் எப்போதும் இனிமையையே தருகின்றன, இதை அறிந்திருந்தும் சிலர் அவ்வப் பொழுது கடுமையான வார்த்தைகளைப் பேசுவது ஏன்?
|
|
Translation
|
|
Who sees the pleasure kindly speech affords,
Why makes he use of harsh, repellant words?.
|
|
Explanation
|
|
Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?.
|
|
Transliteration
|
|
Insol Inidheendral Kaanpaan Evankolo
Vansol Vazhangu Vadhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|