|
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர். ('குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்: ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின். இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பால் மலை போல் உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் - தாம் தாழ்தற் கேதுவான இழி செயல்களை ஒரு குன்றிமணியளவே செய்வாராயினும் குன்றுவர் - தம் நிலையினின்றுந் தாழ்வர். குன்று என்னும் சொல் இங்குத் தன் சிறப்புப் பொருளை யுணர்த்தாது பொதுப் பொருளை யுணர்த்திற்று. குன்றியனைய செயினும் என்னும் இழிவு சிறப்பும்மை தொக்கது இங்குள்ளஅணி சொற்பின் வருநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈ.டுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
குன்றிமணி யளவு மிகச் சிறிய மானக்குறைவான காரியத்தைச் செய்துவிட்டாலும் மலைபோன்ற புகழுடைய மிகப் பெரிய மனிதர்களும் மதிப்பிற் குறைந்து போவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
குடிப்பிறப்பால் குன்றினைப் போல் உயர்ந் தோரும் தாழ்தற்குக் காரணமான செயல்களை ஒரு குன்றி மணி அளவு செய்வாராயின் தாழ்ந்துவிடுவர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மலைபோல் உயர்ந்த தன்மை உடையவர்களும், உலகம் பழிக்கும் செயல்களைக் குன்றிமணியளவே செய்யினும் தாழ்ச்சி உறுவர்.
|
|
Translation
|
|
If meanness, slight as 'abrus' grain, by men be wrought,
Though like a hill their high estate, they sink to nought.
|
|
Explanation
|
|
Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.
|
|
Transliteration
|
|
Kundrin Anaiyaarum Kundruvar Kundruva
Kundri Anaiya Seyin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|