|
மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இகழ்வார்பின் சென்று நிலை - மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்துப் புகழ் பயவாது; புத்தேள் நாட்டு உய்யாது - ஏனைப் புத்தேளுலகத்துச் செலுத்தாது; மற்று என் - இனி அவனுக்கு அது செய்வது யாது?(புகழ் பயப்பதனைப் 'புகழ்' என்றார். பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்றது என்னை என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவை செய்தற் குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இம்மைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறுமைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதலில்லை ஆயின், தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது பின்னை என்ன பயனைக் கருதி? இது தம்மை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க வென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இகழ்வார்பின் சென்று நிலை - ஒருவன் தன்மான மின்றித் தன்னை அவமதிப்பார் பின்னே சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்து நிற்கும் புகழைத் தராது; புத்தேள் நாட்டு உய்யாது - மறுமையில் தேவருலகத்திற்குச் செலுத்தாது;மற்று என் - இனி அது அவனுக்கு வேறு என்ன பயனைச் செய்யும்? 'மற்று' பிறிதுப் பொருளிடைச் சொல். 'ஆல்' ஈரிடத்தும் அசைநிலை. இம் மூன்று குறளாலும் மானம் பேணாமையின் இழிபு கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
தம்மை அவமதிக்கிறவர்களை நத்தி அவர்களுக்கு அடங்கி உயிர் வாழ்வது புகழ்தரக் கூடியதுமன்று; புண்ணியமாக மோட்சத்துக்குக் கொண்டுபோய் விடக் கூடியதும் அன்று. பின் எதற்காக அப்படியும் உயிர் வாழ்கிறார்கள்?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை இவ்வுலகில் புகழினையும் கொடுக்காது. புத்தேள் உலகத்தும் செலுத்தாது. இனி,அவன் அப்படி நடப்பது ஏன்?
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தம்மைமதியாது இகழ்வார்பின் சென்று பணிந்து வாழும் நிலை ஒருவர்க்குப் புகழைத் தராது; வானுலகிற்கும் வழியமைத்துக் கொடுக்காது.
|
|
Translation
|
|
It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
Why follow men who scorn, and at their bidding wait?.
|
|
Explanation
|
|
Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.
|
|
Transliteration
|
|
Pukazhindraal Puththelnaattu Uyyaadhaal Enmatru
Ikazhvaarpin Sendru Nilai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|