|
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண் தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது. (ஆற்றல் என்பது பெருமை,அறிவு,முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொதுவகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழாதொழிதல், தம்மைக் காப்பார்க்குக் காவலாகிய எல்லாவற்றுள்ளும் தலையான காவலாம். இது பெரியாரைப் பிழையாமையால் வரும் பயன் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்ட வினை முயற்சிகளை யெல்லாம் வெற்றியாக முடிக்கவல்லவரின் வல்லமையைத் தாழ்வாக மதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தமக்குக் கேடுவராமற் காத்துக் கொள்வார் செய்யுங் காவல்க ளெல்லாவற்றுள்ளும் தலைமையானதாம். 'ஆற்றல்' என்பது ஆக்கத்திற்கும் அழித்தற்கும் ஏதுவான பல்வகை வலிமைகள். இகழ்ந்தவிடத்து அழித்துவிடுவார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், படை,அரண்,நட்பு முதலிய பிறகாவல்கள் அழிக்கப்பட்டு விடுமாதலின் 'தலை' என்றும், கூறினார். இதனால் பெரியாரைப் பிழையாமையின் இன்றியமையாமை கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
தம்முடைய நலங்களைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பு கிறவர்கள் பாதுகாக்க வேண்டிய பொருள்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்த பொருள் எதுவென்றால், தம்மினும் வல்லமையுள்ளவர் களுடைய திறமையைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிடாமை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
எடுத்ததை முடிக்கும் ஆற்றல் படைத்தவர் களுடைய வல்லமைகளை அவமதியாது நடந்து கொள்ளு தல் என்பது, தமக்குத் தீங்கு வராமல் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் மிக்கதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒரு செயலைச் சிறப்பாகச் செய்து முடிக்கவல்லாரின் ஆற்றலை இகழ்ந்து பேசாமை தம்மைக் காத்துக் கொள்ளும் முறைகளுள் தலையாய ஒன்று.
|
|
Translation
|
|
The chiefest care of those who guard themselves from ill,
Is not to slight the powers of those who work their mighty will.
|
|
Explanation
|
|
Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).
|
|
Transliteration
|
|
Aatruvaar Aatral Ikazhaamai Potruvaar
Potralul Ellaam Thalai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|