|
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பெரியாரைப் பேணாது ஒழுகின் - ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின், பெரியாரால் பேரா இடும்பை தரும் - அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவர்க்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும். (அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம்,
அவையெல்லாம் தாமே செய்துகொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின் அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும். இது முனிவரைப் போற்றா தொழியின் அது குற்றம் பயக்கு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பெரியாரைப் பேணாது ஒழுகின் - அறிவாற்றல் மிக்க பெரியாரை அரசர் நன்கு மதித்துப் போற்றாது ஒழுகுவராயின்; பெரியோரால் பேரா இடும்பை தரும் - அது அப்பெரியாரால் அவர்க்கு எப்போரும் நீங்காத துன்பங்களை உண்டாக்கும். துன்பங்கள் இருமையிலும் தம்மாலும் பிறவுயிர்களாலும் தெய்வத்தாலும் இடையறாது நேர்வன.அவை தாமே தேடிக்கொண்டவை யென்பது தோன்ற , ஒழுக்கத்தை வினைமுதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். இதனாற் பெரியாரைப் பிழைத்தலின் தீமை பொதுவகையாற் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பெரியாருடைய ஆலோசனையைக் கேட்டுக்கொள்ளாமல் அவர்களை அலட்சியம் அலட்சியம் செய்துவிட்டால் பிறகு அந்தப் பெரியவர்களே முயன்றாலும் மாற்ற முடியாத துன்பங்கள் வந்து விடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஆற்றல்களினால் பெரியாராயினோரைப் போற்றாமல் அவமதித்து நடப்பானானால் அப்பெரியாரால் எக்காலத்திலும் அவனுக்கு நீங்காத துன்பங்கள் உண்டாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
போற்றத்தக்கப் பெரியோரை மதித்துப் போற்றாவிடின், அப் பெரியாரால் பெருந்துன்பம் நேரிடும்.
|
|
Translation
|
|
If men will lead their lives reckless of great men's will,
Such life, through great men's powers, will bring perpetual ill.
|
|
Explanation
|
|
To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.
|
|
Transliteration
|
|
Periyaaraip Penaadhu Ozhukir Periyaaraal
Peraa Itumpai Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|