Thirukural

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார்.

பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கு மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக. (அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பகைவரது தலைமையைக் கெடுக்க மாட்டாதார், அப்பகைவர் உயிர்க்கும் மாத்திரத்திலே அறுதியாகச் சாவார். இது பகை கொள்ளுங்கால் வலியாரோடு பகைகோடலாகா தென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார்- தம்மைப் பகைப்பவரின் செருக்கை அடக்கும் நிலைமை யிருந்தும் இகழ்ச்சியால் அதைச் செய்யாது விட்டுவிட்டவர்; மன்ற உயிர்ப்ப உளர் அல்லர்- பின்பு, உறுதியாக மூச்சுவிடும் அளவிற்கும் உயிர் வாழ்பவராகார். முன்பு மெலியராயிருந்த பகைவர் பின்பு வலியராகித் தம்மை வேரொடு களைதல் திண்ணமாதலின், 'உயிர்ப்பவுளரல்லர் மன்ற' என்றார் 'எலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும்' என்பதுபோல், அவர் உயிர்த்த அளவிலேயே இறந்து விடுவர் என்று உரைப்பினும் அமையும். 'மன்ற' என்னுஞ் சொற்கு முன்பு உரைத்தது போல் உரைக்க. இக்குறளால் பகையை முளையிற்களையாவழி நேருங்கேடு கூறப்பட்டது. முந்தின குறளும் இதுவும் பகை முதிர்ச்சியே பற்றிக் கூறினும், அது 'கைகொல்லும்' முதிர்ச்சியும் இது மெய்கொல்லும் முதிர்ச்சியும் பற்றியன என வேறுபாடறிக.
கலைஞர் உரை:
பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பகையை விட்டு வைக்கக் கூடாது. எந்த விதத்திலாவது தீர்த்து விடவேண்டும். ஏனெனில்) பகைவர்களுடைய கொற்றத்தை அடக்கி விடாதவர்கள் நிம்மதியாக வாழமுடியாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தம்முடன் பகைப்பவரது தருக்கினைக் கெடுக்கக் கூடியவராய் இருந்து, இகழ்ச்சியால் அது செய்யாத அரசர், பிறகு மூச்சு விடும் அளவிற்கும் உயிருடன் இருப்பவராக மாட்டார்.
தமிழ்க்குழவி உரை:
பகைவர்தம் வலிமையை அழித்து ஒழிக்க இயலாதவர் உயிரோடு இருப்பதற்கும் தகுதியில்லாதவர் ஆவார்
Translation
But breathe upon them, and they surely die, Who fail to tame the pride of angry enemy.
Explanation
Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.
Transliteration
Uyirppa Ularallar Mandra Seyirppavar Semmal Sidhaikkalaa Thaar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 880