|
முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
முள்மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டுவதாய முள்மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர் கைகொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும். (களைப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக, அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல், இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
முள்மரத்தை இளைதாகவே களைக: முற்றினவிடத்துத் தன்னைக் களைவார் கையைக் கொல்லுமாதலால். இது பகைவர் வலியராவதன்முன்னே களைதல் வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
முள்மரம் இளைதாகக் கொல்க - களையவேண்டிய முள்மரத்தைக் கையினால் எளிதாகப் பிடுங்கியெறியும் கன்றுப் பருவத்தே களையாவிடினும் , இளமரமாயிருக்கும் போதேனும் வெட்டி. விடுக; காழ்த்த விடத்துக்களையுநர் கைகொல்லும் - அங்ஙனமன்றி அது முதிர்ந்தபின் களையின், அது தன்னைப் பலர்கூடி வெட்டினும் அவர் கைகளைப் பொறுத்தற்கரிய அளவு வருத்தும். களைய வேண்டிய பகையை அது மெலிதாயிருக்குந் தொடக்க நிலையிலேயே களைந்துவிடுக. அங்ஙனமன்றி அது வலுத்தபின் அதைப் பலர் கூடித்தாக்கினும் அது தாக்குவாரைத் தாக்கும் என்னும் பொருள்தோன்ற நிற்பதால், இதுபிறிது மொழிதல் என்னும் அணியாம். இதனாற் பகையைக்களையும் பருவம் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பகையை முற்றவிடக்கூடாது. ஆரம்பித்திலேயே வெற்றி யினாலோ நட்பினாலோ பகை இல்லாமற் செய்துவிட வேண்டும்.) முள்மரத்தை அது சிறு செடியாக இருக்கும்போதே பிடுங்கி அழித்துவிட வேண்டும். முதிர்ந்து மரமாகி விட்டபின் அதை வெட்டப் போகிறவர்கள் கையையும் அது வெட்டிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
களைய வேண்டிய முள் மரத்தினை இளைய தாசு இருக்கும் போதே களைந்து விடுதல் வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் முதிர்ந்தபோது களைபவர்கள் கையினை அது தானே கெடுக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சிறியதாக இருக்கும் போதே முள்மரத்தை அழித்துவிட வேண்டும். அம்மரம் வளர்ந்தபின் அழிக்க நினைத்தால் முனைபவர் கைகளுக்கு ஊறு நேரும்.
|
|
Translation
|
|
Destroy the thorn, while tender point can work thee no offence;
Matured by time, 'twill pierce the hand that plucks it thence.
|
|
Explanation
|
|
A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.
|
|
Transliteration
|
|
Ilaidhaaka Mulmaram Kolka Kalaiyunar
Kaikollum Kaazhththa Itaththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|