|
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நிழல் நீரும் இன்னாத இன்னா - ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னாவாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னாவாம் - அதுபோலத் தழுவவேண்டுவனவாய தமரியல்புகளும் முன் இனியவேனும் பின் இன்னா செய்வன இன்னாவாம். (நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின. 'தமர்' என்றதனால் உட்பகை யாதற்குரியராய ஞாதியர் என்பது அறிக.இன்னா செயல் - முன் வெளிப்படாமை நின்று துணை பெற்றவழிக் கெடுதல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன்னாத செய்யும் நீர் இன்னாதாகும். அதுபோலச் சுற்றத்தார் நன்மை இனிதாயினும் அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின் அஃது இன்னாதாயே விடும். இது சுற்றமென் றிகழற்க என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நிழல் நீரும் இன்னாத இன்னா- மக்கள் இன்பமாக நுகரும் நிழலும் நீரும் பின்பு நோய் செய்வனவாயின் தீயனவேயாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னா ஆம்- அதுபோலத் தமக்குத்துணையாயிருக்க வேண்டிய தம்மைச் சேர்ந்தவர் இயல்புகளும் நன்மை செய்வனபோல் தோன்றித் தீமை செய்யின் தீயனவே யாம். தீய நிழலால் வரும் நோய் தலைவலி, காய்ச்சல் முதலாயின. தீய நீரால் வரும்நோய். யானைக்கால், பெருவயிறு (மகோதரம்) முதலாயின. தமர் என்பார் தம் குடும்பத்தாரும், தம் உறவினரும் தம் வகுப்பாரும், தம் கூட்டத்தாரும், தம் ஊராரும், தம் நாட்டாரும் தம் மொழியாரும் எனப் பல திறத்தார். முன் தோற்றத்தாலன்றிப் பின்விளைவாலேயே, பொருள்களும் மக்களும் முறையே நல்லனவுந் தீயனவும் நல்லவருந் தீயவருமாதல் அறியப்படும் என்பதாம். இக்குறளால் உட்பகையின் இயல்பு கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
வசிக்கின்ற சொந்த இடமும் பழக்கமான தண்ணீருங் கூட நோயுண்டாக்குமானால் அவை விலக்க வேண்டிய தீமைகளே. அதைப்போல் உடனிருக்கும் உறவினர்களின் நடத்தையும் தீமை கருதியதாக இருந்தால் அவர்களும் விலக்கிவிட வேண்டிய தீயவர்களே.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நிழலும் நீரும் முன்னர் இனியவைபோல் இருந்தாலும் பின்னர் நோய் செய்வனவாகும். அதுபோல் உட்பகையினர் முன்னர் இனியவரேயானாலும் பின்னர் தீங்கு பயப்பவராவார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நிழலின் கண் உள்ள நீரும் உடலுக்குத் தீங்கு விளைவிக்குமாயின் தீயனவே; அதுபோல் சுற்றத்தாரின் இயல்புகளும் துன்பம் தருமாயின் தியனவே.
|
|
Translation
|
|
Water and shade, if they unwholesome prove, will bring you pain.
And qualities of friends who treacherous act, will be your bane.
|
|
Explanation
|
|
Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.
|
|
Transliteration
|
|
Nizhalneerum Innaadha Innaa Thamarneerum
Innaavaam Innaa Seyin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|