|
துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நொந்தது அறியார்க்கு நோவற்க - நொந்ததனைத் தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க: மென்மை பகைவர் அகத்து மேவற்க - வலியின்மை பார்த்திருக்கும் பகைவர்மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க. ('நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று. பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக; அதுபோலப் பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக. இது பகைவர்மாட்டுத் தமது மென்மையைத் தோற்றுவியா தொழிகவென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நொந்தது அறியார்க்கு நோவற்க - தான் துன்புற்றதை அறியாத நண்பர்க்குத் தன் துன்பத்தைச் சொல்லற்க; பகைவரகத்து மென்மை மேவற்க - வலியின்மைபார்த்திருக்கும் தன் பகைவரிடம் தன் வலிமையின்மையை மேலிட்டுக்கொள்ளற்க. நோதல்வினை இங்கு நோதலைச் சொல்லுதலைக் குறித்தது சொல்லும் போதும் உள்ளத்தில் நோதல் தோன்றுதலின் அரசியல் வாழ்க்கையில் நட்புப் பெரும்பாலும் நிலையில்லாததும் உண்மை யற்றதுமாதலின் பகைவரிடம் வெளிப்படுத்தக் கூடாததைச் சொல்லும்போதே நண்பரிடம் சொல்லக்கூடாததையும் உடன் கூறினார்.
|
|
கலைஞர் உரை:
|
|
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனுடன் தம்முடைய பலவீனத்தைப் பிறர் அறியவிடக் கூடாது.) ஒருவன் ஏழையாகிவிட்டதை அதை அறியாதவர் களிடத்தில் சொல்லிக் கொள்ளக் கூடாது. அதைப்போல் தன் பலவீனத்தைப் பகைவர்களிடம் காட்டிவிடக்கூடாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தான் நொந்திருப்பதனைத் தாமாக அறியா தவர்களுக்குச் சொல்லா திருத்தல் வேண்டும். தனது மென்மையினைப் பார்த்திருக்கும் பகைவரிடத்தில் மேலிட்டுத் தெரியப்படுத்தாதிருத்தல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தன்துன்பம் பற்றி பிறருக்கு அறிவிக்காதிருக்க வேண்டும். அதுபோலவே தன் வலிமையின்மையை பகைவர் முன் வெளிப்படுத்துதல் கூடாது.
|
|
Translation
|
|
To those who know them not, complain not of your woes;
Nor to your foeman's eyes infirmities disclose.
|
|
Explanation
|
|
Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.
|
|
Transliteration
|
|
Novarka Nondhadhu Ariyaarkku Mevarka
Menmai Pakaivar Akaththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|