Thirukural

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையே எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஓருவன்தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. (பொருந்தியது - ஏனையதனை வேறற்கு ஏற்றது. அப்பொழுது - அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இலனாயின் அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. இஃது இருவரோடு பகைக்கொள்ளலாகா தென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தன் துணை இன்று- தனக்குதவுந் துணையொன்று மில்லாமலும் பகை இரண்டு- தன்னைக் கெடுக்கக் கூடிய பகை இரண்டுடையனவாகவும் தான் ஒருவன் -தான் தனியனாகவும் இருப்பவன் ; அவற்றின் ஒன்று இன் துணையாகக்கொள்க- அப்பகை யிரண்டனுள் தனக்கிசைந்த தொன்றை அப்பொழுதைக்கேனும் நிலையாக வேனும் நல்ல துணையாக அமைத்துக்கொள்க. தனக்கிசைந்து தன்னொடு சேரக்கூடியதும் இன்னொரு பகையை வெல்லுதற் கேற்றதுமாகும்.உண்மையான துணையாகச் செய்து கொள்ள வென்பார் இன்றுணையா என்றார். ஆல் இரண்டும் அசைநிலை. ஆக என்னும் வினையெச்ச வீறு ஆ எனக் கடைக்குறைந்து நின்றது. கொள்கவற்றின் என்பதில் அகரந்தொக்கது. இவ்விரு குறளாலும் நட்பாக்கக் கூடியபகை கூறப்பட்டது.
கலைஞர் உரை:
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இது எல்லாருக்கும் நல்ல குணம். முக்கியமாகத்துணைப் பலம் இல்லாமல் தனியனாக இருப்பவன் கவனிக்கவேண்டியது.) துணை வலிமை இல்லாமல் தனியாக இருக்கிற ஒருவன், போர் மூண்டுவிட்டால் துணைவர்களையாவது தேடிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பகைவர்களையேனும் நட்பாக்கிக் கொள்ளச் சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இன்துணையாகக் கொள்க அவற்றின் ஒன்று தனக்கு உதவியாக இருக்கும், துண்பம் கொடுக்கும் பகை இரண்டாக இருந்தால் ஒருவனாக இருக்கும் தான் அப்பகை இரண்டினுள் பொருத்தமான ஒன்றினை அப்போதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்ளுதல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
தனக்குத் துணைவர் யாரும் இல்லாமல், தனக்குப் பகைவரென இருவர் இருக்க, அவருள் ஒருவரைத் தனக்குத் துணையாக்கிக் கொள்ள முயலுதல் நன்று.
Translation
Without ally, who fights with twofold enemy o'ermatched, Must render one of these a friend attached.
Explanation
He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).
Transliteration
Thandhunai Indraal Pakaiyirantaal Thaanoruvan Indhunaiyaak Kolkavatrin Ondru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 875