|
பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் - வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்துகொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது பெருமையுள்ளே; தங்கிற்று உலகு - அடங்கிற்று இவ்வுலகு. (வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது. வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல். ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள், படை என இருவகைத்தாய ஆற்றல். அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பகைவரை நட்புபோலக் கொண்டொழுகவல்ல பண்புடையவன் பெருமையின்கீழே உலகம் தங்கும். இது பகை கொள்ளாமையால் வரும் பயன் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன் தகைமைக்கண்-இயலுமாயின் பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு அமைதியுடன் ஒழுகும் பண்பாடுள்ள அரசனது பெருமையின் கீழ்; உலகு தங்கிற்று-இவ்வுலகம் அடங்கி நிற்கும். பொருட்கேற்ப ’இயலுமாயின்’ என்பது வருவிக்கப்பட்டது. ’வேண்டிய வழி’ என்னுஞ் சொல்லை வருவித்தார் பரிமேலழகர். அது ’பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல்.' (குறள்.830) என்பதிற் கூறியவாறு கூடாநட்பொடு கூடிவாழும் வலக்கார நிலைமைக்கு ஏற்குமேயன்றி, பகையை நிலையான உண்மை நட்பாக மாற்றியொழுகும் பண்பாட்டு நிலைமைக்கு ஏற்காதென அறிக.பெருமை என்றது பொருள் படை பண்பாடு முதலியவற்றால் ஏற்பட்ட தலைமை. பகையும் நட்பாக மாறியபின் உலக முழுவதும் வயப்பட்டிருக்குமாதலின் 'தகைமைக்கட் டங்கிற் றுலகு' என்றார்.தேற்றமும் நிலைபேறும் பற்றித் 'தங்கிற்று' என இறந்தகாலத்தாற் கூறினார்.
|
|
கலைஞர் உரை:
|
|
பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பகைவரே இல்லாதிருப்பதுதான் நல்லது. அது முடியாமற் பிறர் தம்மீது பகைமை பாராட்டினாலும்) பகைவரையும் நண்பராக்கிக் கொண்டு நடந்துகொள்ளும் குணமுள்ளவனுடைய பெருந்தகைமையில் தான் உலக நலம் அடங்கியிருக்கிறது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
வேண்டியபோது பகையினையும் நட்பாகவே கொண்டு நடந்து கொள்ளுகின்ற தன்மையுடைய மன்னனது சிறப்பினுள்ளே உலகமானது அடங்கி இருப்ப தாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பகைவர் பாலும் அன்பு பாராட்டி நட்பாகக் கொண்டொழுகும் பண்புடையவர்களின் தகைமையாலேயே இவ்வுலகம் தங்கி நிலைபெறுகிறது.
|
|
Translation
|
|
The world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends.
|
|
Explanation
|
|
The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.
|
|
Transliteration
|
|
Pakainatpaak Kontozhukum Panputai Yaalan
Thakaimaikkan Thangitru Ulaku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|