|
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பகை என்னும் பண்பு இலதனை - பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று - ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று. (மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை, ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று. இஃது எவ்விடத்தும் பகைகோடல் தீது என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பகை என்னும் பண்பு இலதனை-பகையென்று சொல்லப்படும் தீயகுணத்தை; ஒருவன் நகையேயும் வேண்டற் பாற்று அன்று-ஒருவன் விளையாட்டிற்கேனும் விரும்பத்தக்கதாக அரசியல் நூலாற் கொள்ளப்படுவதன்று. இது "இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்" என்று இகலைக் கண்டித்தது போன்று பகையைப் பொதுப்படக் கண்டித்ததாகும். அன்பு என்னும் பண்பாட்டுக் குணத்திற்கு மறுதலையாகலின் ’பண்பிலதனை’ என்றும், விளையாட்டே வினையாகவும் முடியுமாதலின் ’நகையேயும்’ என்றும், வேண்டாமை தொல்லாசிரியர் துணிபென்பார் நூலின்மேல் வைத்தும், கூறினார். ’இலதனை’ என்னும் இரண்டாம் வேற்றுமை அரசியல் நூல் என்னும் பெயரை அவாவி நின்றது. இராமன் பையற் பருவத்தில் விளையாட்டாக மந்தரை கூன்மீது மண்ணுண்டை யடித்தது, பின்பு காளைப் பருவத்தில் நாடுவிட்டுக் காடு செல்லக் கரணிய மாயிற்று என்னுங் கதை, "விளையாட்டா யிருந்தது வினையாய் முடிந்தது" என்னும் பழமொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாம். ஏகாரம் பிரிநிலை. உம்மை இழிவு சிறப்பு.
|
|
கலைஞர் உரை:
|
|
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(தீமை வராவிட்டாலும் பகையினால் நன்மை வரவே முடியாது. அதனால்) பகை என்கிற நன்மையே இல்லாத அது, விளையாட்டாகக் கூட விரும்பத்தக்கதல்ல.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பகையென்று சொல்லப்படும் தீமை பயப்பது ஒருவன் விளையாட்டுக்காகவும் கூட விரும்புகின்ற தன்மை யுடைய தன்று.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பகை என்கின்ற பண்பற்ற செயலை ஒருவர் விளையாட்டாகக் கூட விரும்பக் கூடாது.
|
|
Translation
|
|
For Hate, that ill-conditioned thing not e'en in jest.
Let any evil longing rule your breast.
|
|
Explanation
|
|
The evil of hatred is not of a nature to be desired by one even in sport.
|
|
Transliteration
|
|
Pakaiennum Panpi Ladhanai Oruvan
Nakaiyeyum Ventarpaatru Andru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|