Thirukural

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.

வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வில் ஏர் உழவர் பகை கொளினும் - ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக. ('சொல்' ஆகுபெயரான் நீதிநூல் மேல் நின்றது. வீரம் சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று, வந்ததாயினும், தனக்கேயாம். ஏனைச் சூழ்ச்சி உடையாரோடாயின் தன் வழியினுள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும், இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல வேண்டாவாயிற்று. உருவக விசேடம்.)
மணக்குடவர் உரை:
வில்லை ஏராக உடைய பகைவரோடு பகைகொளினும் சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக. இஃது அரசரோடு பகைகொளினும் அமைச்சரோடு பகை கொள்ளலாகாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
வில் ஏர் உழவர் பகை கொளினும்-வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய பொருநரொடு பகை கொண்டாலும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க-சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞரொடு பகைகொள்ளா திருக்க. பொருநர்-போர்மறவர். சொல்லேருழவர்-புலவரும் அரசியலறிஞரான அமைச்சரும். பொருநர் உடல்வலிமையாற் செய்யுங்கேடு ஒரு சிலரையே தாக்கும். ஆயின், அறிஞர் சூழ்ச்சிவலியாற் செய்யுங்கேடு பல பெருநாடுகளையுந் தாக்கிவிடும், உம்மை எதிர்மறை, தாயைப் பழித்தாலுந் தண்ணீரைப் பழிக்கக் கூடாது. என்பது போன்றது இக்குறள். ஆதலால், இருசாராரையும் பகைத்துக்கொள்ளற்க என்பதே கருத்தாம். உழவே முதன்முதல் தோன்றிய மாந்தன் கைத்தொழிலாதலால், ஏனைத் தொழிலாளரையும் உழவராகவும் அவர் தொழில் கருவியை ஏராகவும் உருவகித்தார். தோண்டுதற் பொருள் கொண்ட தொள் என்னும் வினையடிப் பிறந்து பயிர்த்தொழிலை முதலிற்குறித்த தொழில் என்னும் சொல், இன்று தொழில் பொதுப்பெயராக வழங்கி வருவது கவனிக்கத்தக்கது. "The pen is mightier than the sword." என்னும் ஆங்கிலப் பழமொழி இக்குறட் கருத்ததே. காளமேகம் திருமலைராயன் பட்டினத்தில் மண்மாரி பெய்வித்தது, நிறைமொழி மாந்தர் மனமொழி போன்றதாம். ஆயின், அமைச்சர் தம் சூழ்ச்சியால் விளைவிக்கும் கேடு, வில்லேருழவரான மறவர் வாயிலாக நிகழ்த்துவதே என வேறுபாடறிக. ஆகவே, அத்தகைய அமைச்சரைத் துணைக் கொண்ட அரசர், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் கரிகால்வளவனும் சேரன்செங்குட்டுவனும் போன்றாராயின் இருமடி வலியராதலால், அவரொடு பகை எக்கரணியத்தையிட்டுங் கொள்ளத்தக்க தன்றென்பது சொல்லாமலே பெறப்படும்.
கலைஞர் உரை:
படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம். ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பகைமையை விலக்கவே வேண்டும். முக்கியமாக) வில்லேந்திப் போர் புரியும் படை வீரனுடன் பகைத்துக் கொண்டாலும் செல்வாக்குடைய அறிஞர்களுடன் பகைத்துக் கொள்ளக் கூடாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவன், வில்லினை ஏராகவுடைய உழவ ரோடு பகை கொண்டானாயினும், சொல்லினை ஏராக வுடைய உழவரோடு பகை கொள்ளதிருத்தல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
வில் ஏந்தும் வீரர்கள் பகை கொள்ளினும் கொள்ளலாம், சொல் ஏந்தும் அறிஞர்கள் பகையைக் கொள்ளக் கூடாது
Translation
Although you hate incur of those whose ploughs are bows, Make not the men whose ploughs are words your foes!.
Explanation
Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.
Transliteration
Viller Uzhavar Pakaikolinum Kollarka Soller Uzhavar Pakai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 872