|
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின், அஃது ஒப்பது இல் - அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை. (வினை செய்வார் சுற்றத்தார் என்னும் தம்பாலார் கண்ணும் ஒப்ப வேண்டுதலின், 'யார் மாட்டும்' என்றும் , தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்ப வேண்டுதலின் வழுக்காமை 'என்றும்' கூறினார். வாயின் என்பது முதனிலைத் தொழிற் பெயராக வந்த வினை எச்சம். வாய்த்தல்: நேர்படுதல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின் அதனையொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை.
இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறதியின்மை எவரிடத்தும் எப்போதும் தப்பாது வாய்க்குமாயின்; அது ஒப்பது இல் - அது போன்ற நன்மை வேறொன்று மில்லை.
செய்ய வேண்டிய வினைகளை உறவினரிடத்தும் பிறரிடத்தும் ஒப்பச் செய்ய வேண்டுமாதலின் யார்மாட்டும் என்றும், பெருகிய நிலையிலும் சுருங்கிய நிலையிலும் ஒருதன்மையாகச் செய்ய வேண்டுதலின் 'என்றும்' என்றும் , எல்லா வினைகளிலும் தப்பாது கையாள வேண்டுதலின் வழுக்காமை என்றும் , கூறினார் . 'வாய்' என்னும் வினை 'வாய்ந்தன ரென்ப' (தொல். 1582) , 'வாய்ந்தமலையும்' ( குறள் . 737) என்று மெலிந்தும் புடைபெயர்தலாலும் , செயப்படு பொருள் குன்றிய வினையாதலாலும் , 'வாயி' னென்பது முதனிலைத் தொழிற்பெயரடியாக வந்த வினை யெச்சம் என்னும் பரிமேலழகர் கூற்றுப் பொருந்தாது.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தி
யிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு
எதுவும் இருக்க முடியாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) எப்போதும் யாரிடத்திலும் அவரவர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதை மறந்துவிடாமல் இருக்கும் குணம் ஒருவனுக்கு இருக்குமானால் அதற்கு இணையான சிறப்பு வேறில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மறவாமைக்குணம் யாவரிடத்திலும் எக்காலத்திலும் இடையீடின்றி உண்டாகி விடுமானால், அதனையொத்த நன்மை வேறு எதுவும் இல்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மறவாமை ஆகிய பண்பு எவரிடத்தும் எப்பொழுதும் குறையாமல் வாய்க்கப்பெறுமாயின் அதற்கிணையான நன்மை வேறெதுவும் இல்லை.
|
|
Translation
|
|
Towards all unswerving, ever watchfulness of soul retain,
Where this is found there is no greater gain.
|
|
Explanation
|
|
There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.
|
|
Transliteration
|
|
Izhukkaamai Yaarmaattum Endrum Vazhukkaamai
Vaayin Adhuvoppadhu Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|