|
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அரிய என்று ஆகாத இல்லை - இவை செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை, பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப் பெறின். (பொச்சாவாத என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. அந்தக்கரணமாகலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும் தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செயற்கு அரியனவென்று செய்யலாகாதன வில்லை; மறவாமையாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வானாயின்.
இது வினை செய்யுங்கால் மறவாமை வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தினால் எண்ணிச் செய்தால் ; அரிய என்று ஆகாத இல்லை - செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவருக்கு முடியாத கருமங்கள் இல்லை.
இது பரிமேலழகர் கல்வியாரவார உரையைத்தழுவியது . மனத்திற்கு அகக்கரணம் என்று பெயரிருத்தலால் , 'கருவி' என்பதற்கு அவர் மனம் என்று பொருள் கொண்டார் , கரணம் கருவி. இப்பொருட்குப் 'பொச்சாவா' ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
'பொச்சாவாக்' கருவி என்னுந் தொடரைப் பொச்சாவாமையாகிய கருவி என்று இருபெயரொட்டாகக் கொள்வதே இயற்கையான முறையாம் . இப்பொருட்குப் 'பொச்சாவா' ஈறுகெட்ட எதிர்மறைத் தொழிற்பெயர் போல்வதாம் . இடைவிடா முயற்சியும் சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று
எதுவுமே இல்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படிப்பட்டவன் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும்.) கடமைகளை மறந்து விடாமை என்ற கருவியைக் கொண்டு கவனத்துடன் காரியம் செய்பவனுக்கு முடியாத காரியம் ஒன்றுமில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மறதி இல்லாத மனத்தாலே எண்ணிச் செய்யப்பட்டால் 'இவை செய்வதற்கு அருமையானவை' என்று சொல்லப்படும் முடியாத செயல்கள் எதுவுமே இல்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மறதியின்மை ஒருவருக்கு வாய்க்கப் பெற்று, அதனால் ஒரு காரியத்தைத் துணிந்து செய்யப்புகின் அவர்க்கு எதுவும் அரிய செயல் என்று ஆகாது.
|
|
Translation
|
|
Though things are arduous deemed, there's nought may not be won,
When work with mind's unslumbering energy and thought is done.
|
|
Explanation
|
|
There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.
|
|
Transliteration
|
|
Ariyaendru Aakaadha Illaipoch Chaavaak
Karuviyaal Potrich Cheyin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|