|
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர், காலம் கருதி இருப்பர் - தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.' (தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல்,இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்: ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஞாலம் கருதுபவர் - உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதும் அரசர் ; கலங்காது - மனக்கலக்கமின்றி ; காலம் கருதிஇருப்பர் - தமக்கு வலிமிக்கிருப்பினும் தம் வினைக்கேற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி , அது வருமட்டும் அமைதியாகவும் பொறுமையுடனும் காத்திருப்பர் .
'கலங்காது' என்பது வலிமிகுதியையும் அதனால் ஏற்படும் நம்பிக்கையையும் உணர்த்தும் . நட்பாக்கல் , பகையாக்கல் , பிரித்தல் , கூட்டல் , மேற் செல்லல் , இருத்தல் என்னும் அரசர் அறுவகைச் செயல்களுள் , இருத்தல் என்பது மேற்செல்லலின் மறுதலை , 'காலஞ்செய்வது ஞாலஞ் செய்யாது' , என்பராதலின் , 'காலங் கருதியிருப்பர் 'என்றார் .
|
|
கலைஞர் உரை:
|
|
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப்
பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று
காட்டுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(உலகம் மெச்சும்படி) உயர்ந்த காரியங்களைச் செய்து முடிக்கிறவர்கள் தக்க காலம் வாய்க்கிறவரையிலும் பதற்ற மில்லாமல் பொறுத்திருப்பார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தவறாமல் பூமி முழுவதையும் கொள்ளக் கருதும் அரசர், தமக்கு வலிமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற காலத்தினையே சிந்தித்து அது வருமளவும் காத்திருப்பர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உலகையே வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் அதற்குரிய காலம் கனியும் வரை கலங்காது காத்திருப்பர்
|
|
Translation
|
|
Who think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait.
|
|
Explanation
|
|
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.
|
|
Transliteration
|
|
Kaalam Karudhi Iruppar Kalangaadhu
Gnaalam Karudhu Pavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|