|
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து. (உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும்.
இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுந்த அரசன் ஊக்க முள்ளவனாயினும் பகைமேற் செல்லாது காலம் பார்த்து ஒடுங்கியிருக்கின்ற இருப்பு ; பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - சண்டையிடும் செம்மறிக்கடா தன்பகையை வலிமையாய்த் தாக்குதற்குப் பின் வாங்கும் தன்மையது .
ஒடுக்கம் சோம்பலால் ஏற்பட்டதன்றென்பதற்கு 'ஊக்க முடையான் 'என்றார் . ஒடுக்கத்தின் தேவையும் சிறப்பும் தகர்பின் வாங்குதல் என்னும் உவமையால் விளங்கும் .
|
|
கலைஞர் உரை:
|
|
கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக
இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத்
தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அது எதைப் போலென்றால்,) ஊக்கமுடையவன் (காலங் கருதிக் கலங்காமல்) அடங்கியிருப்பது சண்டையிடுகிற ஆட்டுக்கடா எதிரியைத் தாக்கப் பின்புறமாக நகருவதைப் போன்றது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
வலிமை மிகுதியுடைய மன்னன் பகைமேற் செல்லாமல்காலம் பார்த்திருக்கின்ற செய்கை எப்படிப்பட்ட தென்றால், போர் செய்கின்ற ஆட்டுக்கடா மிகுந்த வேகத்துடன் தாக்குவதற்குக் கால்களைப் பின்வாங்கும் தன்மையதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உரம் கொண்ட ஒருவனும் சிலவேளைகளில் அடங்கி ஒடுங்கி இருப்பது போரிடும் ஆட்டுக்கடா, தாக்கப் புகுமுன் பின்வாங்கிச் செல்வது போலாகும்.
|
|
Translation
|
|
The men of mighty power their hidden energies repress,
As fighting ram recoils to rush on foe with heavier stress.
|
|
Explanation
|
|
The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt.
|
|
Transliteration
|
|
Ookka Mutaiyaan Otukkam Porudhakar
Thaakkarkup Perun Thakaiththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|