Thirukural

அருவினை யென்ப உளவோ கருவியான்கால மறிந்து செயின்.

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின். (கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்.
தேவநேயப் பாவாணர் உரை:
கருவியான் காலம் அறிந்து செயின் - சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின் ; அருவினை என்ப உளவோ - அரசர்க்கு முடித்தற்கரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ ? இல்லை . கருவிகள் ஐவகையாற்றலும் நால்வகை ஆம்புடைகளுமாம் . அவற்றொடு காலமும் வேண்டுமென்பதற்குக் 'கருவியான்' என்றார் . 'உளவோ' என்னும் வினா எதிர்மறை விடையை அவாவுவது .
கலைஞர் உரை:
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஒரு காரியத்தைச் செய்து முடிக்க அவசியமான கருவிகளுக்குள்) தகுந்த காலம் என்பதும் ஒரு கருவியாகும். அதை அறிந்து செய்தால் முடியாத காரியங்களும் உண்டா? இல்லை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அவற்றை முடித்ததற்கு ஏற்ற கருவிகளுடனே காலமறிந்து செய்வாராயின், செய்வதற்கு அருமையான தொழில்கள் என்று சொல்லப்படுவனவும் உண்டோ?.
தமிழ்க்குழவி உரை:
செய்தற்குரிய கருவிகளைக் கொண்டு செய்தற்குரிய காலத்தை அறிந்து ஒருவன் செயல்படுவானாயின் அவனுக்கு அரிதான செயல் என்று எதுவுமில்லை.
Translation
Can any work be hard in very fact, If men use fitting means in timely act?.
Explanation
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?.
Transliteration
Aruvinai Yenpa Ulavo Karuviyaan Kaalam Arindhu Seyin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 483