Thirukural

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி.

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம், கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள். (ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஓசை மாத்திரம் கேட்டனவாயினும் அதுவுங் கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி. இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள்; கேட்பினும் கேளாத் தகையவே தம் புலனுக்கேற்ப ஓசையொலிகளைக் கேட்குமாயினும் செவிடாந் தன்மையனவே. ஐம்பொறிகளின் சிறந்த பயன் அறிவுப்பேறாதலின், கேள்வியறி விற்கேற்காத செவிகள் 'கேளாத்தகைய' என்றும், கேள்வியறிவு புகுதற்கு இயற்கைத்துளையினும் வேறான நுண்டுளை வேண்டியிருத்தலின், 'கேள்வியால் தோட்கப்படாத செவி' என்றும், கூறினார். ஏகாரம் தேற்றம்.
கலைஞர் உரை:
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(காதுகளால் அடையக்கூடிய பயன் கேள்வி ஞானந்தான். இல்லாவிடில்) கேள்வி யறிவுகள் அடிக்கடி புகுந்து அவற்றால் தொளைக்கப்படாத காதுகள் ஓசைகளைக் கேட்கக்கூடியனவாக இருந் தாலும் செவிட்டுக் காதுகளேயாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கேள்வி ஞானத்தாலே துளைக்கப்படாத காதுகள் ஓசையினைக் கேட்பதாக இருந்தாலும் கேளாத- செவிடான தன்மை உடையனவே ஆகும்.
தமிழ்க்குழவி உரை:
நல்ல கேள்வி ஞானத்தால் திறக்கப்பட்டு அறிவால் நிரம்பாத செவிகள், கேட்கும் திறன் உடையவனவாக இருந்தாலும் கேளாத் தன்மையினவாகவே கருதப்படும்.
Translation
Where teaching hath not oped the learner's ear, The man may listen, but he scarce can hear.
Explanation
The ear which has not been bored by instruction, although it hears, is deaf.
Transliteration
Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal Thotkap Pataadha Sevi

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 418