|
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார், வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல் கூடாது. (கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்' என்பதூஉம் பாடம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நுண்ணியதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை.
இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நுணங்கிய கேள்வியர் அல்லார் -நுண்ணிதாகிய கேள்வியறி வில்லாதார்; வணங்கிய வாயினர் ஆதல் அரிது-பணிவான சொற்களையுடைய ராதல் இயலாது.
பொருளின் நுண்மை கேள்விமேலும் சொல்வார் பணிவு வாயின் மேலும் ஏற்றிக் கூறப்பட்டன. கேள்வி என்பதைக் கேள்வியறி வென்று கொள்ளின் ஏற்றுரை வழக்காகாது. 'வாய்' ஆகுபெயர். கேள்வி வாயிலாக அறிவு நிரம்பாதார் செருக்கித் தற்புகழ்ச்சி செய்வர் என்பது கருத்து. 'அல்லால்' என்பது பாடவேறுபாடு.
|
|
கலைஞர் உரை:
|
|
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும்
அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கேள்வி யறிவைப் பயபக்தியோடு கேட்டுக்கொள்ளுகிறவர் களுக்குத் தான் விநய குணமும் உண்டாகும்.) கேள்வி ஞானத்தை விநய விருப்பத்துடன் கேட்டுக்கொள்ளாதவர்கள் பணிவான சொற்களைப் பேசக்கூடியவர்கள் ஆக முடியாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நுட்பமாக கேள்வி ஞானத்தினை உடையவ ரல்லாதவர்கள் வணக்கத்தினைக் காட்டுகிற சொற்களை உடையவராதல் என்பது முடியாததாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நுட்பமான கேள்வி ஞானம் இல்லாதவர்கள் பணிவுடன் கூடிய சொற்களை அவையினில் பேசுதல் அரிது.
|
|
Translation
|
|
'Tis hard for mouth to utter gentle, modest word,
When ears discourse of lore refined have never heard.
|
|
Explanation
|
|
It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.
|
|
Transliteration
|
|
Nunangiya Kelviya Rallaar Vanangiya
Vaayina Raadhal Aridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|