|
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - பிறழ உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச் சொல்லார், இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர்- பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார். ('பிழைப்ப' என்பது திரிந்து நின்றது. பேதைமை : ஆகுபெயர். ஈண்டுதல் : பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
(இ-ள்) ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மை யாயின சொல்லார், ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார்.
இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர் - பொருள்களைத் தாமும் நுண்ணிதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் பல்வேறு வகையில் திரண்ட கேள்வியறிவினை யுடையார்; பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - ஏதேனுமொரு பொருளைத் தவறாக உணர்ந்த விடத்தும், தமக்குப் பேதைமையூட்டுஞ் சொற்களைப் பிறர்க்குச் சொல்லார்.
கல்வி கேள்வி யென்னும் இருவழியாலும் அறிவுநிரம்பியவர் ஒன்றைப் பிறழவுணர்ந்த விடத்தும், பொருத்தமாகச் சொல்வர் அல்லது சொல்லாமலே விட்டு விடுவர் என்பது கருத்து. பிழைத்துணர்தல் - பிழையாகவுணர்தல், 'பேதைமை' ஆகுபொருளது. மயக்க நிலையிலும் பிறழாதுரைப்பர் என்பதற்கு, "பிழைத்துணர்ந்தும்" என்னும் தொடர் இடந்தராமை காண்க.
|
|
கலைஞர் உரை:
|
|
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள்,
சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும்
அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எவரிடத்திலாயினும் எவ்வளவாயினும் அறிவுரைகளைக் கேட்டுக்கொண்டே இருப்பவர்கள்) அடிக்கடி பல நல்லுரைகளைக் கேட்டு அவற்றை எண்ணியெண்ணி உணர்ந்து சேகரிக்கப்பட்ட கேள்வி ஞானமுள்ளவர்கள் நினைவு தவறுதலாகக்கூட மூடத்தனமாகப் பேசிவிட மாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நுட்பமாக ஆராய்ந்து அறிந்து நிறைந்த கேள்வியுடையவர்கள் தவறாக பேதைமையினை உண்டாக்கும் சொற்களைச் சொல்லமாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தேர்ந்த கேள்வி ஞானம் உடையவர்கள், ஒன்றைத் தவறுதலாக உணர்ந்திருந்தால் அதை அறியாமை எனக் கருதிப் பிறருக்குச் சொல்ல மாட்டார்கள்.
|
|
Translation
|
|
Not e'en through inadvertence speak they foolish word,
With clear discerning mind who've learning's ample lessons heard.
|
|
Explanation
|
|
Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).
|
|
Transliteration
|
|
Pizhaith Thunarndhum Pedhaimai Sollaa Rizhaiththunarn
Theentiya Kelvi Yavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|