|
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான். ('எனைத்து' , 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும்.
இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்ல கேட்க வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
எனைத்தானும் நல்லவை கேட்க -- ஒருவன் எத்துணைச் சிறிதாயினும் நற்பொருள்களைக் கேட்டறிக; அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் -அக்கேள்வியறிவு அத்துணைச் சிறிதாயினும் நிறைந்த வலிமை பெற ஏதுவாகும்.
எனைத்து அனைத்து என்னும் அளவுச் சொற்கள் பொருளளவுங் கால அளவும் பற்றியன. ஆனும் என்பது ஆயினும் என்பதன்மரூஉ. பலதுளி பெருவெள்ளம். ஆவதுபோல் பல அறிவுத்துணுக்குகள் திரண்டு பேரறிவாவதுடன் ஒரே அறிவுக்குறிப்பு ஒரோவழி உயிரைக் காப்பதும் பெருவெற்றி தருவது முண்டு . ஆதலால் , கேள்வியறிவின் சிற்றளவு பற்றி இகழக்கூடாது என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப்
பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒழுக்கம் உடையவர்களிடத்தில்தான் கேட்கவேண்டு மென்பதில்லை; எவரிடத்திலானாலும்) எவ்வளவானாலும் நல்ல அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும். அவ்வளவுக்கும் மிகுந்த பெருமை உண்டாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் சிறிதளவாகவேனும் நற்பொருள்: களைக் கேட்டாலும், அக்கேள்வியானது அந்த அளவுக் காவது நிறைந்த பெருமைகளைத் தரும் என்பதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சிறிய அளவே என்றாலும் கூட நல்ல உரைகளையே கேட்க வேண்டும். அவை வாழ்க்கையில் உரிய நேரத்தில் உயர்வைத் தரும்.
|
|
Translation
|
|
Let each man good things learn, for e'en as he
Shall learn, he gains increase of perfect dignity.
|
|
Explanation
|
|
Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.
|
|
Transliteration
|
|
Enaiththaanum Nallavai Ketka Anaiththaanum
Aandra Perumai Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|