Thirukural

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்.

ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; நல்லளி வாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும். ('தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும், 'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது' என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம் பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள்.)
மணக்குடவர் உரை:
ஊடலின்கண் எதிராது சாய்ந்தவர் வென்றார்: அவ்வெற்றியை நிலைபெறாநின்ற கூடலின்கண்ணே காணலாகும்.
தேவநேயப் பாவாணர் உரை:
(புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, இப்புலவியால் வருத்துவ தென்னையென்ற தோழிக்கு அவள் சொல்லியது.) ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் கரணகமாக என்கண் தோன்றும் சிறு சடைவினால், நல் அளி வாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி சற்று வாடுமாயினும் பின்பு பெருமை பெறும். தவறில்லாவிடத்து நிகழ்கின்ற வூடல் விரைந்து நீங்குதலின் ' சிறுதுனி ' யென்றும், ஆராமை பற்றி நிகழ்தலின் நல்லளி மாபெரும்பாலும் வாடாதென்பாள் ' வாடினும் ' என்றும், ஒருகால் சற்று வாடினும் அதனாற் பேரின்பம் விளையுமென்பாள் 'பாடுபெறும்' என்றும், கூறினாள். சிறுதுனியாற் பெரும்பயன் விளைதலின் அது வருத்தமெனப்படாதென்பதாம். தலையளி யென்பது பேரின்பக் கலவிக் கூட்டம். எதிர்மறையும்மை அருமைப் பொருளது.
கலைஞர் உரை:
காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பிணங்குவதால் அன்பு வாட்டமுற்றதுபோல் இருந்தாலும் அந்தப் பிணக்கத்தின் பயனாகப் பின்னால் அனுபவிக்கும் புணர்ச்சி மிகவும் இன்பமுள்ளதாக இருக்கிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஊடல் காரணமாகத் தம்மிடம் தோன்றுகின்ற சிறிய பிணக்கினால் காதலர் செய்யும் நல்லன்பு வாடுமாயினும் அது பெருமையினையே பெறுவதாகும்.
தமிழ்க்குழவி உரை:
ஊடலால் உண்டாகும் சிறுதுன்பம் அவர் அன்பை வாடச் செய்வதாய்த் தோன்றினாலும் பின்னர் மிகையான இன்பம் தரும்.
Translation
My 'anger feigned' gives but a little pain; And when affection droops, it makes it bloom again.
Explanation
His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.
Transliteration
Ootalin Thondrum Sirudhuni Nallali Vaatinum Paatu Perum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1322