|
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று.
இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(தலைமகள் கரணகமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்ற தென்னை யென்றாட்கு அவள் சொல்லியது.)
அவர்க்குத் தவறு இல்லையாயினும் - காதலர் பால் தவறில்லையாயினும்; அவர் அளிக்கும் ஆறு ஊடுதல் வல்லது - அவர் நம்மோடு செய்யும் பேரின்பக் கூட்டம் இங்ஙனம் அவரோடூடுதலை விளைக்கும் வலிமையுள்ளதாக விருக்கின்றது.
எல்லையில்லாத இன்பந்தருபவராயிருத்தலின், யான் பெறும் இப்பேரின்பம் பிற மகளிரும் பெறுவரெனக் கருதி, அது பொறாமையால் இவ்வூடல் நிகழ்கின்ற தென்பதாம். ' அவர்க்கு ' வேற்றுமை மயக்கம்; நாலாவது ஏழாவதில் மயங்கிற்று. உம்மை ஒத்துக்கொள்வுப் பொருளது.
|
|
கலைஞர் உரை:
|
|
எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பிறகு புணர்ச்சிக்கு இசைகிற காதலி தனக்குள் நினைக்கிறாள்:) காதலரிடத்தில் ஒரு குற்றமும் இல்லை. ஆனாலும் நான் குற்றங்களைக் கற்பித்துப் பிணங்கினது புணர்ச்சிக்கு அவருக்கிருந்த ஆசைக்கு நிகரான எதிராசையினால் செய்ததுதானே; அதிலென்ன தவறு?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
காதலிரிடத்தில் தவறு ஒன்றும் இல்லையென்றாலும் அவர் நம்மீது பேரன்பினை அளிக்கும் தன்மை அவருடன் பிணக்கினை உண்டாக்கிக் கொள்ள வல்லமையுடையதாகின்றது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அவரிடம் தவறேதும் இல்லை என்றபோதும் ஊடுதல் எதற்காக, அவர் மேலும் அன்பு செலுத்த வேண்டும் என்பதற்காகவே.
|
|
Translation
|
|
Although there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealousy to move.
|
|
Explanation
|
|
Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.
|
|
Transliteration
|
|
Illai Thavaravarkku Aayinum Ootudhal
Valladhu Avaralikku Maaru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|