Thirukural

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்தின்னும் அவர்க்காணல் உற்று.

நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) நெஞ்சே, கண்ணும் கொளச் சேறி - நெஞ்சே நீ அவர்பாற் சேறலுற்றாயாயின் இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - அன்றி நீயே சேறியாயின், இவைதாம் காட்சி விதுப்பினால் அவரைக் காண்டல்வேண்டி நீ காட்டு என்று என்னைத் தின்பன போன்று நலியா நிற்கும். ('கொண்டு' என்பது, 'கொள' எனத் திரிந்து நின்றது. தின்னும் என்பது இலக்கணைக் குறிப்பு. அந்நலிவு தீர்க்க வேண்டும் என்பதாம். என்றது, தான் சேறல் குறித்து.)
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ அவர்மாட்டுச் செல்லுவையாயின் இக்கண்களும் அவரைக்காணும்படி கொண்டு செல்வாயாக: அவரைக் காணலுற்று இவை என்னைத் தின்பனபோல நலியாநின்றன. கொள - பார்க்க.
தேவநேயப் பாவாணர் உரை:
நெஞ்சே கண்ணும் கொளச் சேறி - என் உள்ளமே நீ என் காதலர் பாற் செல்லலுற்றாயாயின் , இக்கண்களையும் உடன் கொண்டுசெல் ; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - ஏனெனின் ; நீ தனியாய்ச் செல்வாயாயின் , இவை அவரைக் காணவேண்டுமென்னும் பேராவலினால் , அவரைக் காட்டச் சொல்வி , என்னைப் பிய்த்துத் தின்றுவிடும். தின்னுதல் என்பது தின்பதுபோலத் தொந்தரவு செய்தல் ; ஆகுவினை . கொண்டு என்பது ' கொள் ' எனத் திரிந்து நின்றது, காதலரிருக்குமிடஞ் சென்று அவரை ஆசை தீரக் காணவேண்டு மென்பதாம் .
கலைஞர் உரை:
நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனால் நீ உடனே அவரிடம் எனக்காகத் தூது செல்வாய்.) மனமே! நீ போகும்போது என் கண்களையும் கூட்டிக்கொண்டு காதலரிடம் போவாய். இல்லையானால் நீ போன பிறகு இக் கண்கள் அவரைப் பார்க்கவேண்டுமென்று என்னைத் தின்றுவிடுவன போலத் துன்பப்படுத்தும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தலைவரைக் காணவேண்டுமென்று கண்கள் என்னைத் தின்பனபோன்று வருத்தி நிற்கின்றன. நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது இக்கண்களையும் உடன்கொண்டு செல்லுவாயாக.
தமிழ்க்குழவி உரை:
நெஞ்சமே, காதலரைக் காணச் செல்லும்போது கண்களையும் அழைத்துச் செல், அவரைக் காணும் அவாப்பெருக்கால் அவை என்னைத் தின்னத் தொடங்கிவிட்டன.
Translation
O rid me of these eyes, my heart; for they, Longing to see him, wear my life away.
Explanation
O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.
Transliteration
Kannum Kolachcheri Nenje Ivaiyennaith Thinnum Avarkkaanal Utru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1244