Thirukural

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர்.

நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர் - யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை.(உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தகுவது' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ?. உறுதல்- விரைந்துறுதல். தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) (இ-ரை.) நெஞ்சே - என் உள்ளமே ! ; யாம் உற்றால் உறாதவர் - யாம் அவர்பால் அன்புகொண்டாலும் தாம் எம்பால் அன்பு கொள்ளாத நம் காதலரை ; செற்றார் எனக் கைவிடல் உண்டோ - வெறுத்தாரென்று நாம் அவரை விட்டு விலகுதல் நமக்குத் தகுமோ ? தகாதே ! உறுதல் அன்பாற் பொருந்துதல் . அவர்பாற் செல்லுவதே நமக்குத் தகும் என்பதாம்.
கலைஞர் உரை:
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
மனமே! நாம் விரும்பினபோது அவர் வரவில்லை என்பதற்காக நம்மை அவர் வெறுத்துவிட்டார் என்று எண்ணிக் கொண்டு நாம் அவரை விட்டுவிடலாமா?
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நெஞ்சமே! நாம் அன்பு கொண்டு அவரைக் காதலித்திருக்க, நம்பால் காதல் கொள்ளாதிருக்கும் அவரை வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலிமை நமக்கு உண்டோ?.
தமிழ்க்குழவி உரை:
நெஞ்சமே, பிரிவுத் துயரால் வருந்தினாலும், என்னை வந்து அணுகாதவரை, பகையாளர் என்று நான் வெறுத்து ஒதுக்கி விட முடியுமா?
Translation
O heart, as a foe, can I abandon utterly Him who, though I long for him, longs not for me?.
Explanation
O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?.
Transliteration
Setraar Enakkai Vitalunto Nenjeyaam Utraal Uraaa Thavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1245