|
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - நெஞ்சே! அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்து படுவதும் செய்யாதிருந்து அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண் பரிந்து உள்ளல் இல் - இப்பையுள் நோய் செய்தார் மாட்டு நமக்கு இரங்கிவரக் கருதுதல் உண்டாகாது ('நம்மாட்டு அருளுடையர் அன்மையின், தாமாக வாரார், நாம் சேறலே இனித்தகுவது' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு? வருத்தமுற்று நினைத்தல் நமக்குச் சிறுமைசெய்யும் நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின். இது வாராது வருந்துகின்றாமென்று கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(இ-ரை.) நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - என் உள்ளமே ! நீ அவர்பாற் செல்வதுஞ் செய்யாது இறந்துபடுவதுஞ் செய்யாது , இங்கிருந்து கொண்டு அவர் வரவு நினைந்து வீணாக வருந்துவது ஏன் ? ; பைதல் நோய் செய்தார்கண் பரிந்து உள்ளல் இல் - இத்துன்ப நோயை உண்டாக்கியவரிடத்துத்தான் நம்மை அன்பாக நினைந்து நம்மிடம் வரக் கருதுதல் இல்லையே ! நம்பால் அருளிலராகவின் தாமாக வரார் . இனி , நாம்தான் அவரிடத்துச் செல்லவேண்டும் என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மனமே! நீ இங்கே இருந்துகொண்டு எனக்காக அனுதாபப் படுவதில் என்ன பயன்? எனக்கு இந்தப் பெரும் வேதனையை உண்டாக்கினவருக்கு என்மீது அனுதாப எண்ணம் இல்லையே!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இத்துன்ப நோயினைச் செய்தவரிடத்தில் நம்மிடம் இரக்கங்காட்டி வருகின்ற எண்ணம் இல்லையே! நெஞ்சமே! நீ அவர் இருக்கும் இடத்திற்குப் போகாமல் இங்கேயே இருந்துகொண்டு அவர் வரவு நோக்கி வருந்துவது ஏன்?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நெஞ்சமே, பிரிவு கொண்டு இங்குவந்தென் பாடகற்றும் பண்பு எம் காதலருக்கு இல்லை, நீ ஏன் அவரை எண்ணி எண்ணி வருந்துகிறாய்?
|
|
Translation
|
|
What comes of sitting here in pining thought, O heart? He knows
No pitying thought, the cause of all these wasting woes.
|
|
Explanation
|
|
O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.
|
|
Transliteration
|
|
Irundhulli Enparidhal Nenje Parindhullal
Paidhalnoi Seydhaarkan Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|