|
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம். (எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பிலார்க்கு உலகியல் தெரியாது என்பார், 'உலகம் இருளின்கண் பட்டது' என்றார். 'பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பண்பின்மையான் ஒருவரோடும் கலந்து உண்மகிழ்தல் மாட்டாதார்க்குப் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கட் கிடந்ததாம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நகல்வல்லர் அல்லார்க்கு -பண்பின்மையால் ஒருவரோடுங் கலந்துரையாடி மகிழுந் திறமில்லாதவர்க்கு; மா இரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகப்பெரிய இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்திருப்பதாகும். ஒருவரோடுங் கலந்தறியப் பெறாத பண்பிலிகட்கு உலகியல் முற்றும் தெரியாதென்பது கருத்து. பட்டன்று என்பது உடன்பாட்டுச் சொல்லாதலின் , ' பாழ் பட்டன்றிருள் ' என்று பாடமோதி, ' இருள் நீங்கிற்றன்று ' என்றுரைப்பது பொருள்கெடாவிடினும் பொருந்தாது. 'மாயிரு' மீமிசைச் சொல்.
|
|
கலைஞர் உரை:
|
|
நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பண்பில்லாதவர்களாக, யாரோடும் அளவளாவி மகிழ்ந்து வாழ முடியாதவர்களுக்கு இந்தப் பெரிய உலகம் பகலிலும் இருண்டுதான் இருக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பண்பில்லாததால் ஒருவரோடும் கலந்து மனமகிழும் தன்மை இல்லாதவர்களுக்கு மிகப்பெரிய இந்த ஞாலம் இருளில்லாத பகல் பொழுதிலும் இருளின் சுண் இருந்ததாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிறரோடு அளவளாவி மகிழ்ந்து வாழ இயலாதவர்க்கு இவ்வுலகப் பகற்பொழுது கூட இருள்சூழ்ந்ததாகவே இருக்கும்.
|
|
Translation
|
|
To him who knows not how to smile in kindly mirth,
Darkness in daytime broods o'er all the vast and mighty earth.
|
|
Explanation
|
|
To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light
|
|
Transliteration
|
|
Nakalvallar Allaarkku Maayiru Gnaalam
Pakalumpaar Pattandru Irul
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|