Thirukural

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலந்தீமை யால்திரிந் தற்று.

பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் - பண்பில்லாதவன் முன்னை நல்வினையான் எய்திய பெரிய செல்வம், அக்குற்றத்தால் ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று - நல்ல ஆன் பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன் சுவைத்தாகாது கெட்டாற் போலும். ('கலத்தீமை' என்பது மெலிந்து நின்றது. தொழிலுவம மாகலின் பொருளின்கண் ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. படைக்கும் ஆற்றல் இலனாதல் தோன்ற 'பெற்ற' என்றும், எல்லாப் பயனும் கொள்ளற்கு ஏற்ற இடனுடைமை தோன்ற, 'பெருஞ்செல்வம்' என்றும் கூறினார். அச்செல்வமும் பயன்படாது என்ற இதனான் வருகின்ற அதிகாரப் பொருண்மையும் தோற்றுவாய் செய்யப்பட்டது. இவை நான்கு பாட்டானும் அஃது இல்லாரது இழிவு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பண்பில்லாதவன் முன்னை நல்வினையா னெய்திய பெரிய செல்வம் அக்குற்றத்தால் ஒருவர்க்கும் பயன்படாது கெடுதல், நல்ல ஆன்பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன்சுவைத்தாகாது கெட்டாற்போலும்.
தேவநேயப் பாவாணர் உரை:
பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் - பண்பில்லாதவன் பழம் பிறப்பிற் செய்த நல்வினையின் பயனாக அடைந்த பெருஞ்செல்வம், ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நல் பால் கலம் தீமையால் திரிந்து அற்று- நல்ல ஆவின்பால் வார்த்த கலத்தின் குற்றத்தாற் களிம்பேறிக் கெட்டாற்போலும். கலந்தீமை என்பது இன்னோசை பற்றிக் கலந்தீமை யென மெலிந்தது. வினையுவமையாதலின் ,பொருளின்கண் ஒத்ததொழில் வருவிக்கப்பட்டது. முன்னை நல்வினைப்பயன் என்பது தோன்றப் ' பண்பிலான் ' என்றும் , ஈட்டும் ஆற்றலிலன் என்பது தோன்றப் ' பெற்ற ' என்றும், எல்லாப் பயனும் பெறுதற்கேற்றது என்பது தோன்றப் ' பெருஞ்செல்வம் ' என்றும , உடையவனுக்கும் பயன்படாமை தோன்றத் ' திரிந்தற்று ' என்றும், கூறினார். இதனால் வருகின்ற அதிகாரத்திற்குந் தோற்றுவாய் செய்யப்பட்டது. இந்நான்கு குறளாலும் பண்பிலாரின் இழிவு கூறப்பட்டது.
கலைஞர் உரை:
பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
அளவளாவி மகிழும் பண்புடைமை இல்லாதவனிடத் திலுள்ள பெருஞ்செல்வம் பெரிய அசுத்தமான பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கெட்டுப் போன பால் போல் யாருக்கும் பயன்படாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பண்பில்லாதவன் பெற்ற பெரிய செல்வம் பயன்படாமல் கெடுதலால் பசுவின் நல்ல பால் பாத்திரத்தின் குற்றத்தினால் இன்சுவையின்றிக் கெட்டது போன்ற தாகும்.
தமிழ்க்குழவி உரை:
பண்பில்லாதவர்களிடம் இருக்கும் பெரும் செல்வமானது அழுக்கேறிய மாத்திரத்தில் காய்ச்சும்பால் திரிந்து விடுதல் போல யாருக்கும் பயனில்லாது வீணாகும்
Translation
Like sweet milk soured because in filthy vessel poured, Is ample wealth in churlish man's unopened coffers stored.
Explanation
The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.
Transliteration
Panpilaan Petra Perunjelvam Nanpaal Kalandheemai Yaaldhirin Thatru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1000