Thirukural

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்பண்பாற்றார் ஆதல் கடை.

நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுவார் மாட்டும்; பண்பு ஆற்றாராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம். (நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.)
மணக்குடவர் உரை:
தம்மொடு நட்பினைச்செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார்மாட்டும் தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம்.
தேவநேயப் பாவாணர் உரை:
நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்புக்கொள்ளாது தமக்குத் தீமையே செய் தொழுகுவாரிடத்தும் ; பண்பு ஆற்றார் ஆதல் கடை -தாம் பண்புடையராயொழுகாமை அறிவுடையார்க்குக் கடைப்பட்ட குற்றமாம். தாமும் அவர் தன்மையராதலால் 'கடை ' என்றார். உம்மை இழிவு சிறப்பு.
கலைஞர் உரை:
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பண்புடையவர்கள் தமக்குத் துன்பம் செய்துவிட்டவர் களுக்கும் இரக்கம் காட்டுவார்கள்.) தம்முடன் நட்பில்லாதவர் களாகத் தமக்குத் துன்பம் செய்கிறவர்களிடத்திலுங்கூடப் பண்புடையவர்கள் இரக்கமில்லாமல் நடந்துகொள்ளமாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தம்முடன் நட்பு கொள்ளாமல் பகைமை யினைச் செய்து ஒழுகுவாரிடத்திலும் தாம் பண்புடைய வராக நடந்து கொள்ளாதிருத்தல் அறிவுடையார்க்குக் குற்றமேயாகும்.
தமிழ்க்குழவி உரை:
நட்பு பாராட்டாமல் நன்றல்லாதன செய்வார்மாட்டும் பண்பு பாராட்டி பழகாமல் இருத்தல் நன்றன்று (இழிவாகும்)
Translation
Though men with all unfriendly acts and wrongs assail, 'Tis uttermost disgrace in 'courtesy' to fail.
Explanation
It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.
Transliteration
Nanpaatraar Aaki Nayamila Seyvaarkkum Panpaatraar Aadhal Katai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 998