Thirukural

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது. இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சான்றாண்மை யென்று சொல்லப்படும் உரம் வாய்ந்திருப்பின் ; ஒருவற்கு; இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு வறுமை இழிவாகாது. உள்ளத்திற்கு உறுதியுண்டாக்குதலின், சால்பு உரமாயிற்று. இன்மை பொருளின்மை, 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" (மூதுரை,4) என்பதாம்.
கலைஞர் உரை:
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
சான்றாண்மை என்னும் வல்லமையுள்ள ஒருவனுக்கு வறுமை இகழ்ச்சி தரக்கூடியதன்று.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
சான்றாண்மை என்று சொல்லப்படும் வலிமையானது உண்டாகப் பெற்றால், ஒருவனுக்கு வறுமை யானது இழிவுடையதாகாது.
தமிழ்க்குழவி உரை:
சான்றாண்மை என்னும் ஆற்றல் மிக்க பண்பு ஒருவரிடம் இருக்குமெனில், இல்லாமை ஆகிய வறுமை இழிவாகக் கருதப்படாது.
Translation
To soul with perfect virtue's strength endued, Brings no disgrace the lack of every earthly good.
Explanation
Poverty is no disgrace to one who abounds in good qualities.
Transliteration
Inmai Oruvarku Ilivandru Saalpennum Thinmai Un Taakap Perin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 988