Thirukural

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படு வார்.

சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். 'பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'(புறநா.330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.)
மணக்குடவர் உரை:
சால்புடைமையாகிய கடற்குக் கரையென்று சொல்லப்படுவார், ஏனைக் கடலுங் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும் தாம்திரியார்.
தேவநேயப் பாவாணர் உரை:
சான்றாண்மைக்க ஆழி எனப்படுவார் - சால்பு என்னும் கடலிற்குக் கரையாகச் சொல்லப்படுவார்; ஊழிபெயரினும் - ஊழிமுடிந்து உவர்க்கடல் கரைகடப்பினும் ; தாம் பெயரார் - தாம் தம் சால்பெல்லை கடவார். சால்பின் பெருமை பற்றி அதனைக் கடலாக்கியும் , அதன் எல்லையில் நிற்றலின் அதை யுடையாரை அதன் கரையாக்கியும், கூறினார்.
கலைஞர் உரை:
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
நற்குணங்கள் நிரம்பிய கடல் போன்ற சான்றோர்கள் யுகப் புரட்சி ஏற்பட்டு உலகங்களெலல்லாம் நிலைகலங்கினாலும் தாம் தம்முடைய நிறை குணத்தில் நிலை கலங்கமாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
சான்றாண்மை என்கின்ற கடலுக்குக்கரை என்று சொல்லப்படுவோர், அக்கடலும் கரையுள் நில்லாமல் காலம் திரிந்தாலும் தாம் திரிய மாட்டார்கள்.
தமிழ்க்குழவி உரை:
கடல்போல சான்றாண்மைக்கு நிறைகலனாய்த் திகழ்பவர் இயற்கையே தன் நிலையில் பிறழ்ந்தாலும், தான் பிறழ்வதில்லை.
Translation
Call them of perfect virtue's sea the shore, Who, though the fates should fail, fail not for evermore.
Explanation
Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.
Transliteration
Oozhi Peyarinum Thaampeyaraar Saandraanmaikku Aazhi Enappatu Vaar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 989