|
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பெருமை என்றும் பணியும் - பெருமையுடையார் அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி அமைந்தொழுகுவர்; சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியும் - மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையா நிற்பர். (பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்பட்டன. இஃது 'அற்றம் மறைக்கும் பெருமை'(குறள் 980) என்புழியும் ஒக்கும். 'என்றும்' என்பது பின்னும் வந்து இயைந்தது. ஆம் என்பன இரண்டும் அசை. புனைதல் - பிறரின் தமக்கு ஓர் மிகுதியை ஏற்றுக்கோடல். இதற்கு, 'உயர்ந்தார் தாழ்வார்; தாழ்ந்தார் உயர்வார், இஃதொரு விரோதம் இருந்தவாறு என்?' என உலகியலை வியந்து கூறிற்று ஆக்குவாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பெருமை எக்காலத்தும் பிறரைத் தாழ்ந்தொழுகும்: சிறுமை தன்னைப் பெருக்க நினைத்து அலங்கரிக்கும். இது பெருமையாவது பணிந்தொழுகுதலென்று கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பெருமை என்று பணியும் - பெருமை யுடையோர் எக்காலத்துஞ் செருக்கின்றி அடங்கியொழுகுவர்; சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியும் - மற்றச் சிறுமை யுடையோர் எக்காலத்துஞ் தம்மை மெச்சி உயர்வுபடுத்திக் கூறுவர். மாந்தரின் செயல்கள் அவர் பண்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டன. 'என்றும் ' என்பது இரு தொடருக்கும் பொதுவாய் நின்றது. 'ஆம்' ஈரிடத்தும் அசைநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
உண்மையாகவே பெருந்தன்மையான மனமுள்ளவன் யாரிடத்திலும் பணிவாக நடந்துகொள்வான். பெருமையற்ற சிறுமனம் படைத்தவன் எப்போதும் தன்னைத்தானே புகழ்ந்து மாலை சூட்டிக் கொள்ளுவான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பெருமையுடையவர்கள் சிறப்பு உண்டான போதும் பணிவுடன் அமைந்து ஒழுகுவார்கள். மற்றைச் சிறுமையுடையார் அது இல்லாதபோதும் தம்மை மெச்சிக் கொண்டு சிறப்பித்துக் கொவ்வர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பெருமைக்குரியவர்கள் எப்போதும் பணிவுடன் நடந்து கொள்வார்கள், சிறுமைப்பண்புடையவர்களோ, தங்களை வியந்து தாமே பேசிக் கொள்வர்.
|
|
Translation
|
|
Greatness humbly bends, but littleness always
Spreads out its plumes, and loads itself with prais
|
|
Explanation
|
|
The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.
|
|
Transliteration
|
|
Paniyumaam Endrum Perumai Sirumai
Aniyumaam Thannai Viyandhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|