Thirukural

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்சீரல் லவர்கண் படின்.

சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சிறப்பும் தான் - தனக்கு ஒக்கும் பெரியாரிடத்து அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும்; சீர் அல்லவர்கண்படின் - தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின்; இறப்பே புரிந்த தொழிற்றாம் - அதனை ஒழிந்து தருக்கின் கண்ணே மிக்க செயலை உடைத்தாம்.(தருக்கினை மிகச்செய்யும் என்பதாயிற்று. சிறப்பு - குடிமை, செல்வம், கல்விகளினாய மிகுதி. இவை இரண்டு பாட்டானும் அஃதிலார் செய்தி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
செல்வமானது தனக்கு நிகரில்லாதார்மாட்டே நிற்குமாயின், நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின தொழிலை உடைத்தாம். சீரல்லவர்- பெரியரல்லர்.
தேவநேயப் பாவாணர் உரை:
சிறப்பும் தான்- பெருமையைத் தரும்செல்வம்; கல்வி அதிகாரம், மதிநுட்பம் முதலியவற்றின் மிகுதிதானும்; சீர் அல்லவர் கண் படின் - தன்னைக் கொண்டிருத்தற்குத் தகுதியில்லாத சிறியோரிடம் சேரின் ; இறப்பே புரிந்த தொழிற்றாம் - அடக்கமின்றிச் செருக்கே மிகுந்த செயல்களைச் செய்யும் இயல்பினதாம். "உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை அடக்கமி லுள்ளத்த னாகி - நடக்கையின் ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல் ." இவ்விரு குறளாலும் சிறியோ ரியல்பு கூறப்பட்டது.
கலைஞர் உரை:
சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.
சாலமன் பாப்பையா உரை:
பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
சிறப்புங்கூடத் தகுதியற்றவர்களுக்கு வந்துவிட்டால் அது அதிக்கிரமங்களைச் செய்வதே வேலையாக இருக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
சிறப்பானவை, தகாத சிறியவர்களிடத்தில் இருந்து விடுமானால் அவை செருக்கு மிகுந்த செய்யும் தொழில்களையே செய்யும் என்பதாம்.
தமிழ்க்குழவி உரை:
சிறப்பான வாழ்க்கை நிலை, தகுதியில்லாதவர்களுக்கு வாய்த்து விடின் வரம்பு மீறிய செயல்களைச் செய்ய முற்படுவர்
Translation
Whene'er distinction lights on some unworthy head, Then deeds of haughty insolence are bred.
Explanation
Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.
Transliteration
Irappe Purindha Thozhitraam Sirappundhaan Seeral Lavarkan Patin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 977