Thirukural

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம் என்னும் நோக்கு.

பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - அப்பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினை யாம் கோடும் என்னும் கருத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது. (குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை, பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து. இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - கல்வியறி வாற்ற லொழுக்கங்களாற் பெரியாரைப் போற்றி அவரைப் பின்பற்றுவோம் என்னும் குறிக்கோள்; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - அந்நால்வகையிலும் சிறியவராயிருப்பவரின் உள்ளத்தில் தோன்றுவதில்லை. இம்மனப்பான்மை அறியாமை, செருக்கு, தன்னலம் ஆகிய வற்றால் உண்டாவது. மறைமலையடிகள் காலத்தில் அவர்களைத் தமிழர் போற்றாதிருந்ததே இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாம்.
கலைஞர் உரை:
பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தம்மினும் பெரியவர்களை அணுகித் தமக்குத் தெரியாத வற்றைத் தெரிந்துகொள்ளும் எண்ணம், சிறுமனம் உள்ளவர் களிடத்தில் இருக்காது. (பெருந்தன்மையான மனம் படைத்தவர் களிடத்தில்தான் இருக்கும்.)
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஆற்றல் மிகுந்த பெரியோரை வழிபட்டு அவர் இயல்பினைக் கைக்கொள்ளுவோம் என்னும் கருத்து, மற்றைச் சிறியோர் மனத்தில் உண்டாகாது.
தமிழ்க்குழவி உரை:
பெருமைக்குரியவர்களைப் போற்றி வாழ்கின்ற உயர்ந்த நோக்கம் சிறுமைக்குரியவர்களின் உணர்வில் தோன்றாது.
Translation
'As votaries of the truly great we will ourselves enroll,' Is thought that enters not the mind of men of little soul.
Explanation
It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.
Transliteration
Siriyaar Unarchchiyul Illai Periyaaraip Penikkol Vemennum Nokku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 976