Thirukural

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது.

சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சூது - சூது; பொருள் கெடுத்து - தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ - பொய்யை மேற்கொள்ளப் பண்ணி, அருள் கெடுத்து - மனத்து எழும் அருளைக் கெடுத்து, அல்லல் உழப்பிக்கும் - இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும். (இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும், தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும் ஏனையவற்றான் மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ' என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.)
மணக்குடவர் உரை:
சூது, முற்படப் பொருளைக் கெடுத்து அதன் பின்னர்ப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி அருளுடைமையைக் கெடுத்து அல்லற்படுத்துவிக்கும்.
தேவநேயப் பாவாணர் உரை:
சூது-சூதாட்டு; பொருள் கெடுத்து- தன்னைப் பயில்கின்றவன் தோல்வியால் அவன் செல்வத்தைக் கெடுத்து, பொய் மேற்கொளீஇ- வெற்றி பெரும் பொருட்டுப் பொய்யை மேற்கொள்ளப் பண்ணி; அருள் கெடுத்து- தோல்வி வருத்தத்தாலும் வென்றவன்மீது கொள்ளும் பொறாமையாலும் எழும் சினத்தால் அருள் நோக்கைக் கெடுத்து; அல்லல் உழப்பிக்கும்- இங்ஙனம் இருமையிலும் துன்புற்று வருந்தச் செய்யும். மூவகைத் தீங்குகளுள், முன்னதன் விளைவு இம்மையிலும் பின்னவற்றின் விளைவு மறுமையிலும் நிகழ்வனவாம். "பொருள் கொடுத்து என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு மேற்கொளீஇ என்புழி மேற்கோடலாகிய வினைமுதல்வினை" என்னும் பரிமேலழகர் உரை பொருந்துவதே. 'கொளீஇ' இன்னிசையளபெடை.
கலைஞர் உரை:
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(எப்படியெனில்) சூதாட்டம் முதலில் செல்வத்தை அழித்து, அதனால் பொய்களையும் பேசச் செய்து, அதன் பிறகு சீவ காருணியமில்லாத செயல்களையும் செய்யத் தூண்டிப் பல துன்பங்களில் உழலச் செய்துவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
சூதானது, பொருளையும் கெடுத்துப் பொய்யினை மேற்கொள்ளச் செய்து மனத்தில் எழுகின்ற அருளையும் கெடுத்துத் துன்பத்திலேயே உழல வைக்கும்.
தமிழ்க்குழவி உரை:
பொருள்வளத்தை இல்லாமல் செய்து, பொய்யனாக்கி, அருள்சார்ந்த மனநிலையையும் அழித்து, அல்லற்கண் அழுந்தச் செய்வது சூது.
Translation
Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away All grace, and leaves the man to utter misery a prey.
Explanation
Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).
Transliteration
Porul Ketuththup Poimer Koleei Arulketuththu Allal Uzhappikkum Soodhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 938