|
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
காலை கழகத்துப் புகின் - அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கண் கழியுமாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அக்கழிவு தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும். ('பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான் செய்து கொள்ளும் அறம் முதலியவேயன்றி முன்னோரைத் தொடங்கிவருகின்ற செல்வமும் முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
சூதுகழகத்தின்கண்ணே காலைப்பொழுது புகுவானாயின், அது தொன்றுதொட்டு வருகின்ற செல்வத்தினையும் தமக்கியல்பாகிய குணத்தினையும் கெடுக்கும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
காலை கழகத்துப் புகின் - ஒருவன் அறம் பொருளின்பங்கட்குச் செலவிட வேண்டிய காலத்தில் சூதாடுகளம் புகுந்து ஆடுவானாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அது தொல்வரவாகிய பழஞ் செல்வத்தையும் நற்குணங்களையும் நீக்கும். களம் என்றே பொருள்படும் கழகம் என்னும் பொதுச்சொல், இங்கு இடம்பற்றிச் சூதாடு களத்தைக் குறித்தது, 'பழகிய' என்னும் அடை பண்பையுந் தழுவும், ஆதலால் பண்பென்றது இங்கு வழிமுறைப் பண்பை. முன்னோர் தேட்டு முதுசொம் எனப்படும். தான் புதிதாகச் செய்துகொள்ளும் அறம்பொருளே யன்றிமுன்னோரிடமிருந்து வழிவழி வந்த செல்வமும் நற்பண்பும் இல்லாமற்போ மென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
இளம்பிராயத்தில் சூதாட ஆரம்பித்துவிட்டால், அது பல தலைமுறைகளாகப் பரம்பரையாக உள்ள குடும்பச் சொத்துக் களையும் நல்ல குணங்களையும் அழித்துவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நற்பணி செய்யவேண்டிய காலமானது. சூதாடும் இடத்தில் கழியுமானால் நெடுங்காலமாக வந்த செல்வத்தினையும் நற்குணங்களையும் அது அழிக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சூதாடு களத்தில் கால்வைத்தவர்களுக்குப் பழகிய செல்வமும், பண்பின் நலமும் பாழ்பட்டொழியும்.
|
|
Translation
|
|
Ancestral wealth and noble fame to ruin haste,
If men in gambler's halls their precious moments waste.
|
|
Explanation
|
|
To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.
|
|
Transliteration
|
|
Pazhakiya Selvamum Panpum Ketukkum
Kazhakaththuk Kaalai Pukin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|