|
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப்போய்ப் பகைவர் கண்ணே தங்கும். (கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத்தொகை. ஆயம் - வடமொழித் திரிசொல், காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின் அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவானாயின், பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உருள் ஆயம் ஓவாது கூறின்-ஒருவன் உருள்கின்ற கவற்றொடு சேர்த்த பணையத்தை இடைவிடாது சொல்லிச் சூதாடுவானாயின்; பொருள் ஆயம் போய்ப் புறமே படும்-அவன் தேடிய செல்வமும் பொருள்வருவாயும் அவனை விட்டு நீங்கி எதிரிகளிடம் போய்ச் சேரும். 'ஆயம்' இரண்டனுள் முன்னது சூதாட்டைக் குறித்தது; தாயம் என்னும் சொல்லின் திரிபு : பின்னது வருவாயைக் குறித்தது; வா என்னும் சொல்லினின்று திரிந்தது. 'உருளாயம்' வினைத்தொகை. 'பொருளாயம்' உம்மைத்தொகை. ஆயம் என்னும் சூதாட்டுப் பெயர் உருள் என்னும் அடையால் சூதாட்டுக் கருவியையும், கூறின் என்னும் வினையால் பணையத்தையும், குறித்து இருமடியாகு பெயராயிற்று. பணையம் பந்தயப் பொருள்; வட்டினியென்றும் பெயர்பெறும். ஒவ்வொரு சூதாட்டத்திலும் பணையங் கூறிய பின்னரே காய்களைப் பாய்ச்சுதலால், அக் கூற்றுக் கருவியொடு சார்த்திக் கூறப்பட்டது. 'போஒய், இசைநிறையளபெடை. பொருள்களையெல்லாம் பணையமாக வைத்துத் தோற்றபின், அவற்றின் வருவாய்களையும் வைப்பது வழக்கமாதலின், 'பொருளாயம்......புறமே படும்' என்றார். " 'ஆயம்' வடமொழித் திரிசொல்." என்பது பரிமேலழகர் நச்சுக் கூற்று. ஏகாரம் பிரிநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
பணயம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈ.ட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
சூதாட்டம் ஒருவனை ஓயவிடாது. சொல்லப்போனால் பண வருவாய்க்கு வழியே இல்லாமல் உள்ளதெல்லாம் தொலைந்து போய் அதன் பிறகே ஓயும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உருளும் கவற்றின் (சூதாடும் கருவி கண்பட்ட ஆயத்தினை) ஓயாது சொல்லிச் சூதாடுவானானால் அவன் ஈட்டிய பொருளும் வருவாயும் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தே தங்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சூதாடும் கருவியில் மனம் லயிக்க எப்போதும் அதிலேயே மூழ்கியிருந்தால் இருக்கும் பொருட் செல்வமும் அவனைவிட்டு எங்கேயோ போய்விடும்.
|
|
Translation
|
|
If prince unceasing speak of nought but play,
Treasure and revenue will pass from him away.
|
|
Explanation
|
|
If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands.
|
|
Transliteration
|
|
Urulaayam Ovaadhu Koorin Porulaayam
Pooip Purame Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|