Thirukural

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் - அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல் - பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ? ஆகாது. (அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம்.)
மணக்குடவர் உரை:
முன்பு ஒருபொருளைப் பெற்று அவ்வாசையாலே மற்றொரு பொருளினைப் பெறலாமென்று நூறு பொருளை யிழக்கின்ற சூதாடிகளுக்கு நன்றெய்தி வாழ்வதொரு நெறி உண்டாமோ?.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும்-தூண்டில் முள்ளைப் பொதிந்த இரையைப் பெற்றுப் பின்பு உயிரையிழக்கும் மீன் போல, முதலாட்டத்தில் வென்று ஒரு தொகையைப் பெற்றுப் பின்பு இன்னும் பெறுவோம் என்னும் ஆசையால் மேலும் மேலும் ஆடி, முன்பு பெற்றதுபோல் நூறு மடங்கு இழந்து வறியராகி வாழ்நாள் குன்றியிறக்கும் சூதாடிகட்கும்; நன்று எய்தி வாழ்வது ஒர் ஆறு உண்டாம் கொல்-அறமும் இன்பமும் பெற்று நன்றாக வாழ்வதொரு வழியும் உண்டாகுமோ? உண்டாகாது. பொருளைச் சூதாட்டிலேயே தொடர்ந்து செலவழிப்பதாலும் வரவரப் பொருள் குன்றி வருவதாலும், நன்றெய்தி வாழும் வழியில்லையென்றார். 'ஒன்று', 'நூறு' என்பன பொருள் குறியாது அளவு குறித்தன. 'நூறு' என்பது இங்குப் பேரெண்ணைக் குறித்தது. உம்மை இழிவு சிறப்பு. 'கொல், வினா.
கலைஞர் உரை:
ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(எப்படியெனில்) ஒருமுறை கெலித்து நூறுமுறை தோற்றுவிடுகிற சூதாட்டக்காரர்களுக்குச் சுகமடைந்து வாழக் கூடிய மார்க்கங்கூட உண்டா என்ன?
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒன்றை முன்னர் வென்று பிறகு நூற்றினை இழக்கும் சூதர்க்கும் பொருளால் அறமும் இன்பமும் எய்தி வாழ்வதொரு வழி உண்டாகுமோ?
தமிழ்க்குழவி உரை:
ஒரு பொருளைப் பெற்று அதுபோல் நூறுபொருளை இழக்க வைக்கும் தன்மையதாய சூதாட்டத்தின் வலைப்பட்டோர்க்கு நல்ல வாழ்க்கை அமைவதில்லை
Translation
Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way That they may good obtain, and see a prosperous day?.
Explanation
Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ?
Transliteration
Ondreydhi Noorizhakkum Soodharkkum Untaangol Nandreydhi Vaazhvadhor Aaru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 932