Thirukural

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
களித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று - நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினால் நாடுதலை யொக்கும். ('களித்தானை' என்னும் இரண்டாவது, 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ' (கலித்.மருதம் -7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தெளிவித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தௌ¤வித்தல், நீரின்கீழே முழுகினானைத் தீயினாற் சுட்டது போலும். இது பிறர்சொல்லவும் கேளாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
களித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு வெறித்தவனை இது தகாதென்று ஏதுக்களைக் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைக் தீத்துரீஇய அற்று- நீர்க்குள் முழுகினவனை விளக்கொளியால் தேடிப்பார்த்தலை யொக்கும். விளக்கொளி நீருட் செல்லாது போன்று ஏதுரை கட்குடியன் மனத்துட் செல்லா தென்பதாம். களித்தானைக்காட்டுதல் என்பது களித்தானுக்குக் காட்டுதல் என்று பொருள்கொள்ளின் வேற்றுமை மயக்கமும் , களித்தானைக் காணச் செய்தல் என்று பொருள் கொள்ளின் வேற்றுமையியல்பும் , ஆம். இங்ஙனமே 'அவளைக் காட்டென்றானோ' என்னுங் கலித்தொகைத் தொடருங் கொள்ளப்படும் (72). 'கீழ்நீர'் இலக்கணப்போலி. 'துரீஇ' இன்னிசையளபெடை. இக்குறளால் அடிப்பட்ட கட்குடியனைத் திருத்த முடியாமை கூறப்பட்டது.
கலைஞர் உரை:
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கள்ளுண்டு மயங்கி யிருக்கிறவனைச் சீர்திருத்த, நியாயங் களைச் சொல்லுவது ஆழமான தண்ணீருக்குள் முழுகி மறைந்திருப்ப வனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவதைப் போன்றது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கள்ளுண்டு களிப்பவனிடம் 'இது ஆகாது' என்று காரணங்காட்ட முற்படுதல், நீரினுள் மூழ்கிய ஒருவனை விளக்கினால் தேடுவது ஒக்கும்.
தமிழ்க்குழவி உரை:
மதுவுண்டு மயங்குபவனை அறிவுரை கூறித் திருத்த முயல்வது, நீருக்குள் மூழ்கியவனை விளக்கு கொண்டு தேடுவது போலாகும்.
Translation
Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave. Is he who strives to sober drunken man with reasonings grave.
Explanation
Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.
Transliteration
Kaliththaanaik Kaaranam Kaattudhal Keezhneerk Kuliththaanaith Theeththureei Atru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 929