Thirukural

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்துஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
களித்து அறியேன் என்பது கைவிடுக - மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும் - அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவில் மிக்கு வெளிப்படுதலான். ('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக: மனத்தின்கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சேர்ந்து புலப்படும்; அது கள்ளிற்கு இயல்பு. உளம் கெடாதென்பார்க்கு இது கூறப்பட்டது.
தேவநேயப் பாவாணர் உரை:
களித்து அறியேன் என்பது கைவிடுக - கள்ளை மறைவாக உண்டுவருபவன், அதை யுண்ணாத வேளையில், நான் கள்ளுண்டறியேன் என்று தன்னை ஒழுக்கமுள்ளவனாகக் காட்டிக் கொள்வதை விடுக. நெஞ்சத்து ஒளித்தும் ஆங்கே மிகும் - பிறரறியின் இழிவென்று முன்பு தன் மனத்தில் மறைத்து வைத்திருந்த குற்றமும் மறுமுறை யுண்டபொழுதே முன்னினும் அதிகமாக வெளிப்பட்டுத் தோன்றும். களித்தல் கள்ளுண்டல் அல்லது கள்ளுண்டு வெறித்தல் வெறிக்காவிடினும் வாய்நாற்றமே கள்ளுண்டதைக் காட்டிவிடுதலால், 'ஒளித்ததூஉ மாங்கே மிகும்' என்றார்.'ஒளித்ததூஉம் இன்னிசையளபெடை. ஏகாரம் பிரிநிலை. இவ்விரு குறளாலும் கள்ளுண்டல் மறைக்கப்படாமை கூறப்பட்டது.
கலைஞர் உரை:
மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
'போதையினால் தெரியாமற் செய்துவிட்டேன்' என்று பின்னால் சொல்லச் செய்கிற குடிப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். மனத்தில் மறைத்து வைத்திருக்கிற இரகசியங்களும் அதைப்போலவே போதையில் வெளியாகிவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கள்ளினை மறைந்துண்டு, உண்ணாதபோது "யான் கள்ளுண்டறியேன்' என்று கூறுதலை நீக்குதல் வேண்டும். கள்ளுண்டபோது நெஞ்சத்தில் ஒளித்த குற்றமும் மிகுந்து வெளிப்பரப்புவதாகும்.
தமிழ்க்குழவி உரை:
மது அருந்துபவன் இதற்குமுன் அருந்தியதே இல்லை என்று சொல்லாதிருப்பானாக. அருந்திய உடனேயே அவன் உள்ளக்கிடக்கைகள் வெளிப்பட்டு விடும்.
Translation
No more in secret drink, and then deny thy hidden fraud; What in thy mind lies hid shall soon be known abroad.
Explanation
Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.
Transliteration
Kaliththariyen Enpadhu Kaivituka Nenjaththu Oliththadhooum Aange Mikum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 928