Thirukural

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்கள்ளொற்றிக் கண்சாய் பவர்

கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கள் ஒற்றிக் கண் சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்; உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர். (உள்ளூர் - ஆகுபெயர், 'உண்டு' என்பது அவாய் நிலையான் வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.)
மணக்குடவர் உரை:
தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்த உள்ளூராலே இகழப்படுவர்; எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே தாழ்வார்.
தேவநேயப் பாவாணர் உரை:
கள் ஒற்றிக் கண்சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அதனால் வெறியேறி அறிவு தளர்பவர்; உள் ஊர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூராரால் உள்ளத்திலுள்ள மறைபொருள்கள் உய்த்துணரப்பட்டு எப்போதும் நகையாடப்படுவர். கள்வெறியினால் உணர் விழந்தவர் பொருள் விளங்காத தொடர்களை மட்டுமன்றி, நனவுக் காலத்தில் தம் உள்ளத்தில் மறைத்துவைத்திருந்தனவும் தமக்கு மாறானவும் தம்மைத் தாழ்த்து வனவுமான செய்திகளையும் வெளிவிடுவராதலின் , உள்ளொற்றியுள்ளூர் நகப்படுவர் என்றார். கள்ளைக்குடித்தால் உள்ளதைச்சொல்வான் . 'கள்ளைக்கொடுத்துக் கருமத்தை (காரியத்தை) அறி'. என்பன பழமொழிகள் .'உள்ளூர்' 'இலக்கணப்போலி'. 'ஊர்' 'கண்' ஆகுபெயர்கள். உண்டு என்பது அவாய்நிலையான் வந்தது.
கலைஞர் உரை:
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கள்ளைக் குடித்து நிதானமிழந்து கண் சுழலுகின்ற குடியர்கள் தினந்தினம் வீட்டுக்குள் குடித்தாலும் வீதிக்கு வந்து ஊருக்குள் பிறர் நகைக்க மானங் கெடுவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கள்ளினை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்பவர் உள்ளூரில் வாழ்பவரால் உள் நிகழ்வது உய்த்துணரப்பட்டு எப்போதும் நகுதல் செய்யப்படுவார்.
தமிழ்க்குழவி உரை:
மறைவாக அமர்ந்து மதுவருந்தி மயங்குபவர்கள், எந்நாளும் ஊரார் அறிய எள்ளலுக்கு ஆளாவர்.
Translation
Who turn aside to drink, and droop their heavy eye, Shall be their townsmen's jest, when they the fault espy.
Explanation
Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.
Transliteration
Ullotri Ulloor Nakappatuvar Egngnaandrum Kallotrik Kansaai Pavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 927