|
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கள் காதல் கொண்டு ஒழுகுவார் - கள்ளின்மேற் காதல் செய்தொழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படார் - எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளி இழப்பர் - அதுவே அன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர். (அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றாற் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார், தம் முன்னோரான் எய்தி நின்ற ஒளியினையும் இகழற் பாட்டான் இழப்பர் என்பதாம். இவை இரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனான் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார். இது மதிக்கவும் படார்: புகழும் இலராவரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கள் காதல் கொண்டு ஒழுகுவார் - கள்ளின் மேற் பெருவிருப்பங்கொண்டு நடப்பவர்; எஞ்ஞான்றும் உட்கப்படார்-ஒருபோதும் பகைவரால் அஞ்சப்படார்; ஒளிஇழப்பர்- அதுவேயுமன்றித் தாம் பெற்றிருந்த நற்பெயரையும் இழப்பர். பேரரசராயினும் கள்ளுண்டு வெறித்த விடத்துச் சிறு பிள்ளையாலும் எளிதாய்க்கொல்லப் படுவராதலாலும், அந்நிலைமையடையுமாறு எவ்வேளையிலும் உட்பகைவராற் கள்ளூட்டப்படுவராதலாலும், எஞ்ஞான்றும் 'உட்கப்படார்' என்றும், ஒழுக்கக்கேடும் மானக்கேடும் பற்றி இகழப்படுவராதலால் 'ஒளியிழப்பர்' என்றும் கூறினார். 'படாஅர்' இசைநிறையளபெடை.
|
|
கலைஞர் உரை:
|
|
போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
கள்ளாசை கொண்டவர்கள் எக்காலத்திலும் பிறரால் மதிக்கப்படமாட்டார்கள்; உள்ள பெருமைகளையும் இழந்து விடுவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கள்ளின்மீது காதல் கொண்டு ஒழுகுபவர்கள் எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்பட மாட்டார்கள். அதுவேயல்லாமல் தங்கள் புகழினையும் இழப்பர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மதுவின்பால் மயக்கம் கொண்டு கிடப்பவர்கள், பிறரால் விரும்பப்படுவதில்லை. பெருமையெல்லாம் இழந்தொழிவர்.
|
|
Translation
|
|
Who love the palm's intoxicating juice, each day,
No rev'rence they command, their glory fades away.
|
|
Explanation
|
|
Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).
|
|
Transliteration
|
|
Utkap Pataaar Oliyizhappar Egngnaandrum
Katkaadhal Kontozhuku Vaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|