Thirukural

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்.

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அகன் அமர்ந்து ஈதலின் நன்று - நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். (இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார்.)
மணக்குடவர் உரை:
மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று: முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின்.
தேவநேயப் பாவாணர் உரை:
முகன் அமர்ந்து இன்சொலனாகப் பெறின்-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ந்து இனிய சொல்லும் உடையனாகப் பெறின்; அகன் அமர்ந்து ஈதலின் நன்று-அது மனமுவந்து ஒரு பொருளைக் கொடுத்தலினும் சிறந்ததாம். வெறுநோக்கினும் வெறுஞ் சொல்லினும் ஒரு பொருளைக் கொடுத்தலே உண்மையிற் சிறந்ததாயினும், மக்கள் பொதுவாக வெளிக்கோலத்திற்கே வயப்படுவதால், அகமலர்ச்சி வெளிப்படாத கொடையினும் முகமலர்ச்சியோடு கூடிய இன்சொல்லே நல்ல தென்றார்.
கலைஞர் உரை:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இந்தக் குணம் தானம் கொடுப்பதினும் சிறந்தது). முக மலர்ச்சியோடு இனிய வார்த்தைகளைச் சொல்லுவது மனப்பூர்வ மாகத் தானம் கொடுப்பதிலும் நல்லது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
முகமலர்ச்சியுடன் இனிய சொல்லினனாக இருந்து விட்டால், அத்தன்மை நெஞ்சம் உவந்து ஈகையினைச் செய்வதை விடவும் நல்லதாகும்.
தமிழ்க்குழவி உரை:
மனம்மகிழ்ந்து பொருட்களை ஒருவர்க்கு வழங்கும் ஈதல் அறத்தைவிட முகம்மலர்ந்து இனிய சொற்களை மொழிவது நன்று.
Translation
A pleasant word with beaming smile,s preferred, Even to gifts with liberal heart conferred.
Explanation
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.
Transliteration
Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu Insolan Aakap Perin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 92