|
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் மறுமைப்பயன் இல்லாதவனது; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று-வினைமுயற்சி வெற்றிபெறுவதில்லை. இல்லறஞ்செய்தற் குரிய உரிமையின்மையின் 'மறுமையிலாளன்' என்றும், ஆண்மையின்மையின் 'வீறெய்தலின்று' என்றும், கூறினார்.
|
|
கலைஞர் உரை:
|
|
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மனைவிக்குக் கீழ்ப் படிகிறவனைவிட இன்னும் கீழ்த்தரமாக மனைவிக்கு அஞ்சி நடக்கிறவனும் உண்டு.) மனைவிக்கு அஞ்சி அடங்கி நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவன் மேற்கொள்ளும் எந்த வேலையும் வெற்றி பெறாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மனையாளை அஞ்சும் (அஞ்சி நடக்கும்) மறுமைப் பயன் இல்லாதவனுக்குத் தொழிலை ஆளும் தன்மை உண்டானபோதும் நல்லோரால் பாராட்டப்பட மாட்டாது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தன்மனைவியிடம் அஞ்சி நடக்கும் மறுமைப்பேறு எய்தவியலாத ஒருவன் மேற்கொள்ளும் பணிகளில் சிறப்பெய்த இயலாது.
|
|
Translation
|
|
No glory crowns e'en manly actions wrought
By him who dreads his wife, nor gives the other world a thought.
|
|
Explanation
|
|
The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.
|
|
Transliteration
|
|
Manaiyaalai Anjum Marumaiyi Laalan
Vinaiyaanmai Veereydha Lindru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|