Thirukural

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும்.

மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும். (அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத்தரும்' என்றார்.)
மணக்குடவர் உரை:
மனையாள்மாட்டுந் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும்.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒருவன் தன் மனைவிக்குப் பணியும் ஆண்மையின்மை; எப்போதும், அஃதில்லாத நல்லாடவருடன் பழகும்போது அவனுக்கு நாணத்தைப் பிறப்பிக்கும்.
கலைஞர் உரை:
நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மனைவி மீதுள்ள ஆசையினால் அவள் சொன்னதை யெல்லாம் செய்கிறவன் தலைகுனிய நேரும்.) மனைவிக்குக் கீழ்ப்படிகிற முறை கெட்ட தன்மை, நல்லவர்கள் மத்தியில் போவதற்கே கூச்சமுண்டாக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவன் தனது இல்லாளிடத்தில் தாழ்ந் திருப்பதற்குக் காரணமான அச்சம், அது இல்லாதவராகிய நல்லாரிடம் செல்லுங்கால் நாணுறுதலை எக்காலத்திலும் அவனுக்குக் கொடுக்கும்
தமிழ்க்குழவி உரை:
தன்மனைவியிடம் சுகபோகத்திற்காக பணிந்து நடக்கும் பண்பில்லாத தன்மை எப்போதும் நல்லவர் மத்தியில் நாணித் தலைகுனிய வைக்கும்.
Translation
Who to his wife submits, his strange, unmanly mood Will daily bring him shame among the good.
Explanation
The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.
Transliteration
Illaalkan Thaazhndha Iyalpinmai Egngnaandrum Nallaarul Naanuth Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 903