|
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். (நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார்.இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக'(சீவக.மண்மகள்.217) என்றார் பிறரும்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும். இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இல்லாளை அஞ்சுவான் - தன் மனைவிக்கு அஞ்சி நடப்பவன்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளைக்கொண்டும் நல்லவர்க்கு நல்லவை செய்ய எப்போதும் அஞ்சுவான். நல்லார்; அரசனொழிந்த ஐங்குறவர், சான்றோர், அருந்தவர்,நல்விருந்தினர் முதலியோர். நல்லவை செய்தல் விருந்தோம்பலும் வேளாண்மை செய்தலும்.விழாநாளிலும் மனைவி மகிழ்ந்திருக்கும் போதும் என்பார் 'எஞ்ஞான்றும் ' என்றார். "இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற் புல்லாள னாக" என்பது சிந்தாமணி(2319). "இருந்து முகந்திருத்தி யீரோடு பேன்வாங்கி விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக ஆடினாள் பாடினா ளாடிப் பழமுறத்தாற் சாடினா டோடத் தான்." என்னும் பிற்காலத் தௌவையா ரொருவர் தனிப்பாடல் கடைப்பட்ட பெண்ணஞ்சி நிலைமையைக் குறிக்கும்.
|
|
கலைஞர் உரை:
|
|
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனென்றால்) எல்லாக் காரியத்துக்கும் மனைவிக்குப் பயந்து நடக்கிறவன் நல்லவர்களுக்கு உதவி செய்யவும் பயப்படுவான். (அதனால் நல்லவர்களுடைய வாழ்த்தும் உதவியும் அவனுக்குக் கிடைக்கமாட்டா.)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தனது மனையாளுக்கு அஞ்சி நடப்பவன் தான் தேடிய பொருளேயானாலும் நல்லவர்களுக்கு எப்போதும் நல்லன செய்தற்கு அஞ்சி இருப்பவனாவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மனைவிக்குப் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் நல்லார்க்கு நல்லன செய்வதற்கும் அச்சம் உடையவனாக இருப்பான்.
|
|
Translation
|
|
Who quakes before his wife will ever tremble too,
Good deeds to men of good deserts to do.
|
|
Explanation
|
|
He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.
|
|
Transliteration
|
|
Illaalai Anjuvaan Anjumar Regngnaandrum
Nallaarkku Nalla Seyal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|