Thirukural

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும்.

கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும். (எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலும் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண,அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப்பானது செல்வம், பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாகத் தனக்கு நாணினைத் தரும்.
தேவநேயப் பாவாணர் உரை:
(இ-ரை) பேணாது பெண்விழைவான் ஆக்கம் -தன் ஆண்மை மேம்பாட்டைக் காவாது தன் மனைவிக்கு அடிமையாகுமளவு அவளைக் காதலிப்பவன் பெற்ற செல்வம்;பெரியது ஓர் நாணாக நாணுத் தரும்-தன்பாலார்க்கெல்லாம் மிகுந்த நாணமுண்டாகுமாறு தனக்கு வெட்கக் கேட்டை விளைவிக்கும். 'ஆக்கம்' என்று அடைகொடாமற் கூறியது,முதுசொம் என்னும் முன்னோர் தேட்டாகவோ மனைவிவழிச் சொத்தாகவோ பெறப்பட்டதென்றுகுறித்தற்கு.பெண்வழிச் செல்வானுக்குப் பொருளீட்டும் ஆற்றலிராதென்பது கருத்து.செல்வத்தை நுகர்ந்தும் ஈந்தும் பயன்படுத்துபவள் மனைவியாதலின் ,ஆண்மைத் தன்மை அவளிடத்தும் பெண்மைத்தன்மை கணவனிடத்தும் உள்ளனவென்று ஆடவர் நாணிக் கடிந்துரைத்தபின், அவரை மீண்டும் பார்த்தற்கு அவன் நாணுதலால், 'நாணாக நாணுத் தரும்' என்றார்.
கலைஞர் உரை:
ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மனைவி எதைச் சொன்னாலும் கேட்கக்கூடா தென்பதன்று பின் என்னவெனில்) ஆலோசிக்காமல் மனைவி சொன்னதையெல்லாம் சொன்னபடி செய்ய விரும்புகிறவனுடைய வாழ்க்கை, பெரிய அவமானமுள்ளதாகி வெட்கத்தால் தலைகுனியச் செய்யும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தனது ஆண்மையினை விட்டு மனையானது பெண்மையினை விரும்புவான் எய்தி நின்ற செல்வம் இவ்வுலகத்து ஆண்பாலர்க்கெல்லாம் நாணுதலைக் கொடுக்கும்.
தமிழ்க்குழவி உரை:
கடமையைப் போற்றாது காம இச்சையால் மனைவியின் பால் கட்டுண்டு கிடப்பவன் தகைமை, மற்றவர்களால் பழிக்கப்படும் தலைகுனிவை நல்கும்.
Translation
Who gives himself to love of wife, careless of noble name His wealth will clothe him with o'erwhelming shame.
Explanation
The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself.
Transliteration
Penaadhu Penvizhaivaan Aakkam Periyadhor Naanaaka Naanuth Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 902