|
எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உட்பகை எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் - அரசனது உட்பகை அவன் பெருமையை நோக்க எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும்; கேடு உள்ளதாம் - பெருமையெல்லாம் அழிய வரும் கேடு அதன் அகத்ததாம். (எத்துணையும் பெரிதாய கேடு, தனக்கு எல்லை வருந்துணையும் எத்துணையும் சிறிதாய உட்பகையுள்ளே அடங்கியிருந்து, வந்தால் வெளிப்பட்டு நிற்கும் என்பதாம். இதனான் அது, சிறிது என்று இகழப்படாது என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எள்ளின் பிளவு போன்ற சிறுமைத்தேயாயினும் உடனே வாழும் பகையினான் ஒருவர்க்குக் கேடு உளதாம். இது பகை சிறிதென் றிகழற்க வென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உட்பகை எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் - உட்பகை சிறிய கூலப் பொருளான எள்ளின் பகுதிபோன்ற சிற்றளவினதேயாயினும்; கேடு உள்ளது ஆம் - வலிமை மிக்க தனிப்பட்டவனையும் குடும்பம் அல்லது அரசையும் அழிக்க வல்லதாம். நஞ்சு சிறிதளவினதாயினும் பெரிய யானையையுங் கொன்று விடுவதுபோல , உட்பகை எத்துணைச் சிற்றளவினதேனும் பெரிய குடியையும் அரசையும் அழித்துவிட வல்லதாதலால் ,அதன் சிறுமைபற்றி இகழக்கூடாதென்பதாம்.ஏகாரம் தேற்றம்.உம்மை இழிவு சிறப்பு.
|
|
கலைஞர் உரை:
|
|
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(உட்பகை என்ற மன விகாரம் எவ்வளவு சிறியதாக உண்டானாலும் உடனே நீக்க வேண்டும் இல்லாவிடில்) எள்ளின் பிளவுபோல வெகு சிறியதாக இருந்தாலும் உட்பகை நாசம் உண்டாக்கி விடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உட்பகை எள்ளின் அளவுபோன்று சிறுமை யுடையதே ஆனாலும், பெருமையெல்லாம் அழிக்கக் கூடிய கேடு அதனுள்ளே இருப்பதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எள்ளின் பிளவுற்ற கூறுகள் போல உட்பகை மிகச் சிறியதாகவே தோன்றினும் அதனால் பெருங்கேடு விளையும்.
|
|
Translation
|
|
Though slight as shred of 'seasame' seed it be,
Destruction lurks in hidden enmity.
|
|
Explanation
|
|
Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.
|
|
Transliteration
|
|
Etpaka Vanna Sirumaiththe Aayinum
Utpakai Ulladhaang Ketu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|